கடந்த 9 ஆண்டுகளில் 24.82 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டனர் என்ற நிதி ஆயோக்கின் அறிக்கை பாஜகவின் இன்னொரு பொய் மூட்டை என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியாவில் 2022-23 தொடர்பான பல பரிமாண வறுமை பற்றி நேற்று முன்தினம் நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 9 ஆண்டுகளில் 24.82 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என்று புள்ளி விவரம் தெரிவிக்கப்பட்டிருந்தது. உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசத்தில் வறுமை விகிதம் கணிசமாக குறைந்துள்ளதே இதற்கு காரணம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதற்கு காங்கிரஸ் கட்சித் தரப்பில் கடும் விமர்சனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட் , இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், "நாட்டில் 24.82 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டு வந்துள்ளனர் என்பது பாஜக அரசின் சமீபத்திய பொய் மூட்டைகளில் ஒன்று. மக்களவை தேர்தல் வரை இதுபோன்று பல பொய் மூட்டைகள் அவிழ்த்து விடப்படும்.
வறுமை குறித்து நிதி ஆயோக் எவ்வாறு கணக்கிட்டது என்பது தெரியவில்லை. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவை இது பற்றி தகவல் எதுவும் வெளியிடவில்லை. நிதி ஆயோக் தான் இது பற்றிய ஆய்வை மேற்கொண்டு, தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால், உண்மை நிலை மிக மோசமாக உள்ளது. இந்த கணக்குகள் அனைத்தும் பாஜகவின் பொய் மூட்டைகள். இந்த ஆய்வில் வேலை இல்லா பிரச்சினையே இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், நாடு முழுவதும் வேலை இல்லா பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. விலைவாசி விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. அதிக அளவிலான வறுமையில் மக்கள் வாடுகிறார்கள் என்பதுதான் நிஜம்.
இந்த நிலையில் வறுமைப் பட்டியலில் இருந்து அந்த 25 கோடி பேரை நீக்கி அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் பறிக்க சதி நடக்கிறது. அந்த மக்களுக்கு ரேஷன் பொருள்கள் உள்ளிட்ட சலுகைகள் வழங்குவதை நிறுத்துவதற்கான திட்டம் தான் இது'' என்றார்.
நிதி ஆயோக்கின் இந்த அறிக்கையை பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் மிக முக்கியமாக ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கியிருக்கும் நிலையில், இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் விமர்சனம் கிளம்பியிருப்பது தேசிய அளவில் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
உதயநிதி குறித்த இரட்டை அர்த்த பேட்டி: மன்னிப்பு கேட்க முடியாது என அண்ணாமலை திட்டவட்டம்!
முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து வைரமுத்து குரலில் 'டீப் ஃபேக்' வீடியோ: பொறியாளர் கைது!
நடுவானில் திடீரென தீப்பிடித்து எரிந்த விமானம்...பதறவைக்கும் வீடியோ!
பாஜகவில் சேர பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியை உதறியவருக்கு அதிர்ச்சி!
திருவிழா கோலம் பூண்டது சேலம்... திமுக இளைஞரணி மாநில மாநாட்டு நிகழ்ச்சிகள் இன்றே தொடங்குகிறது!