விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இன்று காலை வழக்கம்போல பட்டாசு தயாரிக்கும் பணி நடந்துள்ளது. அப்போது, பட்டாசு தயாரிப்பதற்கான இராசயன மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்தில் இருந்து, ஊழியர்கள் அவற்றை இறக்கி வைத்துக்கொண்டிருந்துள்ளனர்.
அந்த நேரம் அதில் இருந்த இரசாயன மூலப்பொருள் ஒன்றில் உராய்வு ஏற்பட்டு வெடிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் ஆங்காங்கே தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இந்த தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய ஊழியர்கள், உடனடியாக தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
» புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: சட்டப்பேரவையில் அரசு தீர்மானம் நிறைவேற்றம்!
» பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்
இதனையடுத்து 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். மேலும், தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தீ விபத்தில் சிக்கி அங்கு பணியாற்றிய ஊழியர்களான புலிக்குட்டி மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி உள்ளிட்ட காவல் அதிகாரிகள், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.