உரிமைத் தொகை கிடைக்காதவர்களை வளைக்க திட்டம்... தொகுதி வாரியாக பட்டியல் போடும் அதிமுகவினர்!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத பெண்களை அதிமுகவுக்கான வாக்காளராக மாற்றும் பலே திட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் அதிமுகவினர்.

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுத் தகுதி அடிப்படையில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு கடந்த செப்டம்பர் மாதம் முதல் ரூ.1,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பித்த ஏராளமானோருக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை. சாதாரண ஆட்டோ டிரைவர், அன்றாட கூலித்தொழிலார்கள் போன்ற அடித்தட்டு மக்கள் பலருக்கும் இந்த தொகை பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு தகுதி இழப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அவர்களை மேல்முறையீடு செய்வதற்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது 9 லட்சம் பேர் வரை மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை விவகாரத்தை அதிமுக, தற்போது கையில் எடுத்துள்ளது. சட்டசபையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இது குறித்து கேள்வி எழுப்பினார்.

தற்போது மக்களவைத்தேர்தல் நெருங்குவதால் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்களை அதிமுக வாக்குகளாக மாற்றுவதற்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி தேர்தல் களப்பணியில் தற்போதே சத்தமில்லாம் களம் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

அவர்கள், தமிழகம் முழுவதும் சட்டசபை வாரியாக ஒவ்வொரு கிராமங்களிலும் களம் இறங்கி யார் யாருக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் பட்டியலை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டியல் தயாரானதும், அவர்கள் அந்த பட்டியலை, அதிமுக ‘பூத்’ கமிட்டி வசம் ஒப்படைக்க உள்ளனர்.

அவர்கள், மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்களை அணுகி, அவர்களை அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க தற்போதே தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE