பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்து வழிபட உள்ளதால் இன்று மாலை முதல் நாளை மதியம் வரை ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் நுழைய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 22 ம் தேதி அயோத்தி ராமர்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அதற்காக விரதம் இருந்து வரும் பிரதமர் மோடி, நாடு முழுவதும் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார். இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி, நாளை திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். அதனால் பாதுகாப்பு நலன் கருதி இன்று 19 ம் தேதி மாலை 6 மணி முதல் நாளை 20 ம் தேதி மதியம் 2.30 மணி வரை பக்தர்கள் ரங்கநாதர் கோயிலில் பொது தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருச்சி மாநகரில் போக்குவரத்து கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சக்கரை ரோடு (ஹோட்டல் ஸ்ரீ) சந்திப்பு முதல் முருகன் கோவில், வடக்கு வாசல், அனைத்து உத்திர மற்றும் சித்திர வீதிகள், அடையவளஞ்சான் வீதிகளில் எந்த வாகனங்களும் செல்லவோ, நிறுத்தவோ இன்றும், நாளையும் அனுமதி இல்லை எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரதமரை வரவேற்க பஞ்சக்கரை ரோடு வரும் அரசியல் கட்சியினரின் வாகனங்கள் திருவானைக்கோவில் டிரங்க் ரோடு சோதனை சாவடி எண் : 6 அருகே கட்சியினரை, இறக்கி விட்டு நெல்சன் ரோடு ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஸ்ரீரங்கத்தில் உள்ள அனைத்து கடைகளையும் அடைக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.