இந்தியாவில் சைபர் குற்றங்கள் எண்ணிக்கை 60.9% அதிகரிப்பு: வல்லுநர்கள் எச்சரிக்கை @ கோவை 

By இல.ராஜகோபால்

கோவை: இந்தியாவில் சைபர் குற்றங்கள் எண்ணிக்கை அபாயகரமான அளவுக்கு அதிகரித்து வருவதாகவும் விழிப்புணர்வுடன் செயல்படாவிட்டால் நிதி இழப்பு மட்டுமின்றி தொழில் நிறுவனத்தின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சிஐஐ கருத்தரங்கில் வல்லுநர்கள் அறிவுரை வழங்கினர்.

இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) கோவை கிளை சார்பில், சைபர் குற்ற தடுப்பு தொடர்பான கருத்தரங்கு ‘செக் போஸ்ட்’ அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (ஆக.13) நடந்தது.

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் பிரிவின் (எஸ்டிபிஐ) இயக்குநர் சஞ்ஜய் தியாகி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது: “இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு மிக அதிக வளர்ச்சி பெற்று உலகளவில் டிஜிட்டல் துறையில் எதிர்கால திறன் மையமாக செயல்படும் நிலையை அடைந்துள்ளது.

ஒருபுறம் சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ள போதும் மறுபுறம் சைபர் குற்றங்களின் அச்சுறுத்தல்கள் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளன. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பத்துறையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அரசுடன் இணைந்து பல ட்ட சோதனைகளை செய்த பின் அவற்றை செயல்படுத்த வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிஐஐ தகவல் தொழில்நுட்ப பிரிவின் இணை ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் பேசும் போது, “நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் எண்ணிக்கை 60.9 சதவீதம் அதிகரித்துள்ளது. அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம். ஸ்டார்ட் அப் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறையினருக்கு உதவும் வகையில் கோவை மாநகரம் சைபர் குற்ற பாதுகாப்பு மையமாக திகழ வேண்டும்” என்றார்.

வேலியன்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநர் ராமசுப்ரமணியம் சைபர் குற்றங்கள் எவ்வாறு நடக்கின்றன என்பது குறித்து பேசினார். சிஐஐ கோவை கிளை துணை தலைவர் ராஜேஷ் துரைசாமி பேசும் போது, “கோவை மாநகரில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றால் நிதி இழப்பு ஏற்படுவது மட்டுமின்றி தொழில் நிறுவனங்கள் கொண்டுள்ள நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்றார்.

ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சைபர் குற்றங்கள் மற்றும் தடுப்பு வழிமுறைகள் குறித்த பல்வேறு தலைப்புகளில் சிங்கப்பூரை சேர்ந்த நிலேஷ் ஜெயின், ஐடிபிஐ வங்கி அதிகாரி சுப்பிரமணியம், செயற்கை நுண்ணறிவு முதன்மை பாதுகாப்பு ஆலோசகர் சக்தி தங்கவேலு, எச்எஸ்பிசி வங்கி சுபோஷிரி தாஸ்குப்தா உள்ளிட்ட வல்லுநர்கள் பலர் பேசினர்.

சிஐஐ கோவை மண்டல தலைவர் சிம்னா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சிஐஐ தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் ராமசாமி நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE