பள்ளி பாடநூல் விலை உயர்வு முதல் கொல்கத்தா வழக்கு நிலவரம் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

தமிழகத்தில் பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்வு: தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்படுகின்றன. அவை தமிழக பாடநூல் கழகம் சார்பில் அச்சிடப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் மற்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஆண்டுக்கு சுமார் 7 கோடி பாடப் புத்தகங்கள் தற்போது அச்சிடப்படுகின்றன. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வர்களுக்கு பாடநூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பின்னர் பள்ளி பாடப் புத்தகங்களின் விலை ரூ.40 முதல் ரூ.90 வரை உயர்த்தப்பட்டுள்ளது. காகிதங்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக பாடநூல் கழகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், பாடநூல் விலையேற்றத்துக்கு தனியார் பள்ளிகள் தரப்பில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் தேநீர் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு: ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தின விழா கொண்டாடப்படும்போது விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொது பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து வழங்குவது ஆளுநரின் வழக்கமான நடவடிக்கையாகும். அதன்படி வியாழக்கிழமை நடைபெறும் சுதந்திர தின விழாவையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட், விசிக ஆகியவை அறிவித்துள்ளன. ‘ஆளுநரின் தொடர் தமிழ்நாடு விரோத நடவடிக்கைகளின் காரணமாக இந்த நிகழ்வை புறக்கணிக்கிறது” என்று அக்கட்சிகள் கூறியுள்ளன.

தமிழக அமைச்சரவைக் கூட்டம்: தமிழக முதல்வர் வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அதற்கு ஒப்புதல் அளிக்கவும், பல்வேறு புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும் தமிழக அமைச்சரவைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ரூ.44,125 கோடியில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன், பசுமை எரிசக்தி சார்ந்த 3 கொள்கைகளுக்கும் ஒப்புதல் தரப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ: சென்னை டிபி சத்திரம் பகுதியில் போலீஸாரை பீர் பாட்டிலால் தாக்கி தப்பிக்க முயன்ற ரவுடியை பெண் எஸ்.ஐ கலைச்செல்வி துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார். துப்பாக்கிச் சூட்டில் வலது காலில் காயம் ஏற்பட்டு அங்கேயே சுருண்டு விழுந்த ரவுடி ரோகித் ராஜ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ரவுடியை துணிச்சலாக துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் காவல் உதவி ஆய்வாளரை சென்னை காவல் ஆணையர் அருண் பாராட்டினார். ரவுடி ரோகித் ராஜ் மீது மூன்று கொலை வழக்கு உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது

‘தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது’ - “பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து எந்த ஒரு கருத்துருவும் தமிழக அரசிடம் இல்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது” என போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது.

மஸ்க் நேர்காணலில் ட்ரம்ப் பகிர்ந்த கருத்து: முன்னாள் அமெரிக்க அதிபரும், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப்பை நேர்காணல் செய்துள்ளார் எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க்.

அதில், “அமெரிக்காவுக்கு சரியான அதிபர் இல்லை. ஜோ பைடன் நிர்வாகம் மோசமாக இருக்கிறது. அவருக்குப் பின் கமலா ஹாரிஸ் அதிபரானால் நிலைமை இன்னும் மோசமாகும். கமலா ஹாரிஸ் அமெரிக்காவை அழித்துவிடுவார். அவருடைய பொருளாதார சிந்தனைகள் நாட்டுக்கு கேடு விளைவிக்கும். ஏற்கெனவே பணவீக்கத்தால் அமெரிக்க பொருளாதாரம் பெரும் பாரத்தை சந்தித்துள்ளது. அமெரிக்கர்கள் மத்தியில் சேமிப்பு குறைந்துவிட்டது. மேலும் அமெரிக்கர்கள் கடன் வாங்கி செலவழிக்க ஆரம்பித்துவிட்டனர். கமலா ஹாரிஸ் அதிபரானால் இது மேலும் மோசமாகும்.

அதுமட்டுமல்லாது அவர் சட்டவிரோத ஊடுருவல்களை ஆதரிக்கிறார். அவருடைய இந்தக் கொள்கை உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். ஏற்கெனவே அவர்களால் அமெரிக்காவுக்கு அளவுக்கு அதிகமான பிரச்சினை உள்ளது” என்று அந்த பேட்டியில் ட்ரம்ப் கூறினார்.

டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக, வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சியின் போது, அவரது செயலாளர்களில் ஒருவராக பணியாற்றினார். தமிழக அரசில் தகவல் தொழில்நுட்பத் துறை, வணிகவரித் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளின் செயலராக பணியாற்றியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு இவர் கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார். கடந்த 2021-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், இவரை உள்துறைச் செயலராக நியமித்தார். அதன்பின், வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டார். ஓய்வு பெற இன்னும் 17 மாதங்கள் உள்ள நிலையில், தற்போது எஸ்.கே.பிரபாகர் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய பாரா பாட்மிண்டன் வீரர் பிரமோத் பகத் சஸ்பெண்ட்: பாராலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பாட்மிண்டன் வீரர் பிரமோத் பகத், ஊக்க மருந்து கட்டுப்பாட்டு விதிகளை மீறிய காரணத்துக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு - அமெரிக்கா மறுப்பு: வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. முன்னதாக, ஷேக் ஹசீனா அளித்த நேர்காணலில், அமெரிக்காவின் சதியால் தான் ஆட்சியை இழந்ததாகக் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மளிகைக் கடைக்காரர் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக, அந்நாட்டில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டம் காரணமாக மூடப்பட்ட அனைத்து தொடக்கப்பள்ளிகளும் சுமார் ஒரு மாதத்துக்கப் பிறகு புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட உள்ளன.

சிபிஐ விசாரணைக்கு மாற்றியது கொல்கத்தா உயர் நீதிமன்றம்! கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், “இந்தக் கொலை குறித்து கல்லூரியின் முதல்வர் ஏன் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யவில்லை? இயற்கைக்கு மாறான மரண வழக்கு என பதியப்பட்டிருப்பது ஏன்?

சம்பவம் நடந்த மருத்துவமனையில் இருந்து விலகிய முதல்வர் சந்தீப் குமார் கோஷுக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு மற்றொரு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பதவி எப்படி வழங்கப்பட்டது? கல்லூரியின் முதல்வரிடம் ஏன் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை?" என்று பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கின் விவரங்களை ஆகஸ்ட் 14-ம் தேதி காலை 10 மணிக்குள் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE