“திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்” - நெல்லையில் சசிகலா குற்றச்சாட்டு

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: தமிழகத்தில் திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுகவினரை ஒருங்கிணைக்கும் முயற்சியாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சசிகலா சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் தென்காசியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவர், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சுற்றுப் பயணத்தை இன்று தொடங்கினார். திருநெல்வேலியில் மாலையில் கொட்டும் மழையில் சுற்றுப் பயணத்தை தொடங்கிய அவர் கொக்கிரகுளத்திலுள்ள எம்ஜிஆர் சிலை, வஉசி மணிமண்டபத்திலுள்ள வஉசி சிலை உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருநெல்வேலி சந்திப்பில் கொட்டும் மழையில் திரண்டிருந்தவர்கள் மத்தியில் பேசிய சசிகலா கூறியது: "தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நல்ல பல திட்டங்களை ஜெயலலிதா நிறைவேற்றினார். ஏழை, எளியவர்களுக்கு ஆடு, மாடுகளை இலவசமாக வழங்கினார். மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். ஆனால் கஷ்டப்படும் மக்களுக்கு தற்போதைய திமுக அரசு எந்த உதவிகளையும் செய்யவில்லை. திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது.

மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள். மக்களிடம் இருந்து பணத்தை பறிக்கும் செயலலில் திமுக அரசு ஈடுபடுகிறது. ஆட்சிக்கு வந்ததில் இருந்து 3 முறை மின் கட்டணத்தை உயர்த்திவிட்டனர். மின் கட்டண உயர்வு என்றும் போக்குவரத்து அபராதம் என்றும் மக்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பின் திருநெல்வேலி மாவட்டத்தில் ஏராளமான கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட எவ்வித திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை" என்று சசிகலா கூறினார்.

நாளை பாளையங்கோட்டை தொகுதியிலும், வரும் 16ம் தேதி நாங்குநேரி, 17ம் தேதி அம்பாசமுத்திரம், 18ம் தேதி ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதிகளிலும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE