நன்மை தரும் நவராத்திரி வழிபாடு... இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

By காமதேனு

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் மூலமாக இருப்பவள் தேவியே. பரம சுகத்தையும், நீண்ட ஆயுளையும், நன்மைகள் பலவற்றையும் பெற வழிவகை செய்யும் 16 செல்வங்களையும் அருளுபவள் அவளே. மும்மூர்த்திகளும் வணங்கும் பரம்பொருள் பராசக்தியே.

ஒரு நாளில் பகல் என்பது சிவன் அம்சமாகவும், இரவு என்பது அம்பிகை அம்சமாகவும் கருதப்படுகிறது. பகலில் உழைக்கும் உயிரினங்களுக்கு, இரவு நேரத்தில், ஒரு தாயாக இருந்து, அவர்களை தன் மடியில் கிடத்தி, தாலாட்டி உறங்கச் செய்பவள் அம்பிகை. இரவெல்லாம் காத்திருந்து உலகத்தைக் காக்கும் அம்பிக்கைக்கு 9 நாட்கள் மட்டுமே விழா எடுக்கப்படுகிறது என்பர்.

பெருந்தேவி தாயார்

ஆதிபராசக்திக்கு ஆயிரமாயிரம் வடிவங்களும் பெயர்களும் உள்ளன. அவற்றில் முதன்மை வடிவங்களாக சரஸ்வதி, லட்சுமி, பார்வதியை நினைத்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது. மனிதனுக்குரிய குணங்களான சத்வம் (மென்மை), ரஜோ (வன்மை), தமோ (மந்தம்) ஆகிய அடிப்படையில் தேவியர் அமைந்துள்ளனர்.

சத்வ குணம் கொண்டவளாக மகாலட்சுமியும், ரஜோ குணம் கொண்டவளாக சரஸ்வதியும், தமோ குணம் கொண்டவளாக பார்வதியும் உள்ளனர். அனைத்து குணங்களும் ஏதாவது ஒரு சமயத்தில் மனிதனுக்கு உதவுகிறது. அதனால்தான் நாம் மூன்று தேவியரையும் வழிபடுகிறோம்.

கன்னி பூஜை

சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்கள் தேவர்களை ஜெயித்தும் அதர்மங்களை விளைவித்தும் வந்தனர். இவர்களின் அழிவுக் காலத்தில், ஆதிபராசக்தியிடம் இருந்து கவுசிகியும், காளிகா என்ற காலராத்திரியும் தோன்றினர். காளிகாவுக்கு துணையாக முப்பெருந்தேவியின் வடிவான அஷ்டமாதர்களும் அஷ்டராத்திரிகளாகத் தோன்றினர்.

பிராம்மணி என்ற பிரம்ம சக்தி அன்ன வாகனத்தில் அட்சமாலை, கமண்டலத்துடனும்,

வைஷ்ணவி என்ற விஷ்ணு சக்தி கருட வாகனத்தில் சங்கு, சக்கரம், கதை, தாமரை மலருடனும்,

மகேஸ்வரி என்ற சிவனின் சக்தி ரிஷப வாகனத்தில் திருசூலம், வரமுத்திரையுடனும்,

கவுமாரி என்ற கார்த்திகேய சக்தி மயூர வாகனத்தில் வேலாயுதத்துடனும்,

மாகேந்திரி என்ற இந்திரனின் சக்தி ஐராவதத்தில் வஜ்ராயுதத்துடனும்,

வாராஹி என்ற வாராஹியுடைய சக்தி எருமை வாகனத்தில் கலப்பையுடனும்,

சாமுண்டா என்ற பைரவரின் சக்தி எம வாகனத்தில் கத்தியுடனும்,

நரசிம்ஹி என்ற நரசிம்ஹி என்ற நரசிம்மரின் சக்தி கூரிய நகத்தை ஆயுதமாகவும் கொண்டு கமல பீடத்தில் தோன்றினார்கள்.

இவர்கள் காளிகா என்ற சண்டிகா தேவியுடன் ஒன்பது ராத்திரிகளாயினர்.

இந்த நவராத்திரி தேவியர் சும்ப – நிசும்பர்களை ஒழித்தனர். அசுரர்களின் கொடுமையில் இருந்து விடுபட்ட தேவர்கள் கவுசிகி அம்பிகையையும், நவராத்திரி தேவதைகளையும் போற்றித் துதித்தனர்.

புரட்டாசி மாதப் பிரதமை முதல் நவமி வரை நவராத்திரி காலமாகும். அதில் முக்குணங்களுக்கும் மூலமான சர்வ கோக நாயகியை ஒன்பது நாட்களும் வழிபடும்போது, முதல் மூன்று நாட்கள் துர்கா பரமேஸ்வரியையும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியையும் அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதிதேவியையும் வணங்க வேண்டும்.

கல்வி, இசை, புகழ், செல்வம், தானியம், வெற்றி ஆகிய அனைத்தையும் சக்தியே தருகிறாள். ஆதிபராசக்தியை துர்க்கையாக வழிபட்டால் பயம் நீங்கும். லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வமும், சரஸ்வதியாக வழிபட்டால் கல்வியும், பார்வதியாக வழிபட்டால் ஞானமும் பெருகும்.

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் இரண்டு முதல் பத்து வயதுக்கு உட்பட்ட கன்னியர்களை வழிபட வேண்டும். இக்கன்னியர்களுக்கு குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்று பெயர் சூட்டி ஸ்ரீரஸ்து, ஸ்ரீயுக்தம் என்ற சொற்களை முதலாகக் கொண்ட மந்திரங்களைக் கூறி பூஜிக்க வேண்டும்.

ஒவ்வொரு கன்னி பூஜைக்கு ஏற்ப நமக்கு பலன்கள் கிடைக்கும். நமது எண்ணம் அனைத்தும் ஈடேறும் என்பது திண்ணம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE