காங்கிரஸ் அல்லது பாஜகவைத் தானே பாமக ஆதரித்தாக வேண்டும்! - ஜி.கே.மணி பளிச்

By ராஜேஷ் மகாலிங்கம்

மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன. திமுக, அதிமுக, பாஜக என மூன்று அணிகள் அமைவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ள நிலையில், வடமாவட்டங்களில் வலுவான கட்சியாக பார்க்கப்படும் பாமக என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்பதை அறிய அனைத்துக் கட்சிகளும் ஆவலோடு காத்திருக்கின்றன.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி வலிமையாக இருக்கிறது. ஆனால், பாஜக கூட்டணி முறிவால் திமுக அணியிலிருக்கும் சில கட்சிகள் அதிமுக பக்கம் சாயலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. அப்படியான சூழல் அமைந்தால் பாமகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்கவும் திமுக தயாராகவே இருக்கிறது. அதனால் தானோ என்னவோ பாமக தனது முடிவை இன்னும் தெளிவுபடுத்தாமல் இருக்கிறது. ஒருவேளை, திமுக கூட்டணிக்கு பாமக வருமானால், விசிகவும் தமிழக வாழ்வுரிமை கட்சியும் திமுக கூட்டணியில் நீடிப்பதில் சிக்கல் உண்டாகலாம்.

இருப்பினும் திமுக கூட்டணியில் இடம்பிடிப்பதற்கான வேலைகளை பாமக செய்யத் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். அண்மையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்துப் பேசியதையும் இதன் ஒரு பகுதிதான் என்கிறார்கள்.

அதேபோல 3 நாட்கள் நடந்த சட்டப்பேரவை நிகழ்வுகளில் திமுகவுக்கு எதிரான எந்தவிதமான நிலைப்பாட்டையும் பாமக எடுக்கவில்லை. வன்னியர் உள் இடஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாகக்கூட பாமக சட்டப்பேரவையில் வலியுறுத்தவில்லை. என்ன நினைக்கிறது பாமக? அந்தக் கட்சின் சட்டமன்றக் குழு தலைவர் ஜி.கே.மணியிடம் பேசினோம். இனி அவரது பேட்டி...

ஜி.கே.மணி

பாமகவின் கதவுகளை தட்டுவதாக மருத்துவர் ராமதாஸ் பதிவிட்டுள்ளாரே... அப்படி தட்டுவது யார்?

பதிவிட்டவர் மருத்துவர் ஐயா அவர்கள். இதுகுறித்து நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். இருந்த போதிலும் பாமகவின் தயவை நாடுபவர்கள் நிச்சயமாக கதவைத் தட்டத்தான் செய்கிறார்கள். கதவைத் தட்டுபவர்கள் தட்டிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் எங்கள் கோரிக்கை மட்டும் அப்படியே உள்ளது. அதைத்தான் எங்கள் ஐயா அவர்கள் குறிப்பிட்டுள்ளார். கதவைத் தட்டுபவர்கள் யார் என்று கேட்காதீர்கள்...(சிரிக்கிறார்)

திமுகவை பாமக நெருங்கிறதா..?

யாரையும் யாரும் நெருங்கும் இடத்தில் இல்லை. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அதற்கான கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நிலையில் எங்கள் தலைமை உள்ளது. அதனால் இப்போதே அதுகுறித்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நினைக்கிறேன். எங்கள் மருத்துவர் ஐயா மற்றும் அன்புமணி அவர்கள் உரிய நேரத்தில் நிச்சயம் இதுதொடர்பாக பேசுவார்கள்.

இப்போதெல்லாம் திமுகவை பாமக பெரிதாக விமர்சிப்பதில்லையே..?

நிச்சயமாக கிடையாது. மக்களின் பிரச்சினைகளுக்கு முதலில் குரல் கொடுக்கும் கட்சியாக பாமக உள்ளது. திமுகவுக்கு எதிராக நாள்தோறும் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். உங்களுக்கு அது தெரிவதில்லை என கூறுங்கள். தவறு எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் அதனைத் தட்டிக் கேட்க பாமக தயங்கியது கிடையாது. சமீபத்தில் என்எல்சிக்கு எதிராக போராடிய எங்கள் தலைவர் அன்புமணி உள்ளிட்ட பாமகவினர் பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் போராட்டம் தொடங்கி செவிலியர் போராட்டம் வரை மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக பாமக உள்ளது.

இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலில் நம்பிக்கையளிக்கும் செய்தி இருக்கும் என எதிர்பார்த்ததோம். ஆனால், அத்தகைய நம்பிக்கை அளிக்கும் உத்தரவாதம் எதுவும் அரசு சார்பில் அளிக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்பதை பதிவு செய்துள்ளோம். ஆக, எங்களுடைய பாதையில் நாங்கள் தெளிவாக பயணிகின்றோம்.

சட்டப்பேரவையில் ஜி.கே.மணி

மக்களவைத் தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்..?

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. உரிய நேரத்தில் எங்கள் தலைவர் ஐயா அவர்கள் பாமகவின் நிலைப்பாட்டை அறிவிப்பார்கள். ஏற்கெனவே தலைவர் அன்புமணி, 2026 சட்டமன்றத் தேர்தல் தான் எங்கள் இலக்கு என்பதை ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். அதன்படி நாங்கள் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறோம். மக்களவைத் தேர்தலில் பிரதான கட்சிகளாக காங்கிரஸும் பாஜகவும் இருக்கின்றன. அதன்படி பார்த்தால் யாரையாவது ஒருவரைத் தானே ஆதரித்தாக வேண்டும். அதன் அடிப்படையில் தான் முடிவுகள் இருக்கும்

அதிமுக - பாஜக கூட்டணி முறிவை எப்படி பார்க்கிறீர்கள்..?

அது இரண்டு கட்சிகளின் நிலைப்பாடு; அதில் நாங்கள் கருத்து சொல்ல முடியாது. எங்களைப் பொறுத்தவரை தற்போது வரை நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை.

சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை என்ற அதிமுகவின் குற்றச்சாட்டு குறித்து..?

அது அதிமுகவின் கருத்தாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை சபாநாயகர் அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ அதன் அடிப்படையில் தான் செயல்படுகிறார் என நினைக்கிறேன். மக்களின் பிரச்சினையைப் பேசத்தான் சட்டபேரவை என்பதை எல்லோரும் புரிந்துகொண்டு நடந்து கொள்ள வேண்டும்.

வன்னியர் உள் இடஒதுக்கீடு குறித்து திமுகவின் மெளனத்தை எப்படி பார்க்கிறீர்கள்..?

இதில் நாங்கள் அரசியல் செய்யவிரும்பவில்லை எங்களது உரிமையைக் கேட்கிறோம். வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு, கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. திமுக ஆட்சியில் உறுதி செய்யப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, “தமிழகத்தில் வன்னியர்களுக்கு தனியாக உள் இடஒதுக்கீடு கொடுக்கலாம். அதில் எந்தத் தவறும் கிடையாது. சரியான தரவுகளை வைத்து நியாயப்படுத்தி கொடுங்கள்” என்று தீர்ப்பானது.

இந்த தீர்ப்பு வெளியாகி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகாலம் ஆகிறது. அதன்பிறகு, தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை புதிதாக உருவாக்கி, புதிய உறுப்பினர்கள் மற்றும் தலைவரை நியமித்தது. வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு கொடுப்பதற்கான பரிந்துரைகளை தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் கொடுத்தது. ஆனால், 9 மாதங்கள் ஆகியும், ஆணையம் தமிழக அரசுக்கு இன்னும் எந்தப் பரிந்துரையையும் கொடுக்கவில்லை. அதைத்தான் நாங்கள் வலியுறுத்து வருகிறோம். திமுக அரசு நிச்சயமாக எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா..?

அதைக் காலமும், எங்கள் மருத்துவர் ஐயா அவர்களும் தான் தீர்மானிக்க வேண்டும்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!

கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!

ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE