ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சென்னை அருகே ரூ.150 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

By KU BUREAU

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமாக சொல்லப்படும் ரூ. 150 கோடி மதிப்புள்ள நிலம் பொன்னேரி அருகே உள்ள ஒரக்காட்டில் மீட்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம், நாகேந்திரன், அஸ்வத்தாமன் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஒரக்காட்டில் பொன்வண்டு சோப்பு நிறுவனம் பயன்படுத்திவந்த இடத்தை அதிகாரிகள் மீட்டனர். பொன்வண்டு நிறுவனத்தின் ரூ. 150 கோடி மதிப்புள்ள இந்த 14.5 ஏக்கர் நிலத்தை கைமாற்றி விடுவதில்தான் ஆம்ஸ்ட்ராங் – ரவுடி நாகேந்திரன் இடையே மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த மோதலால் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை சூடுபிடித்துள்ளது.

இதனையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அரசு நிலமான அந்த 14.5 ஏக்கர் நிலத்தை பொன்வண்டு நிறுவனம் ஆக்கிரமித்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் தலைமையில் அதிகாரிகள் அந்த நிலத்தை மீட்டனர். மேலும், அரசு இடத்தை ஆக்கிரமித்து செயல்பட்ட பொன்வண்டு நிறுவனத்தின் கட்டிடங்களும் ஜேசிபி மூலம் இடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலம் போலி பட்டா மூலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பை மீட்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கினர். இருப்பினும், நீதிமன்ற வழக்கால் அது தடைப்பட்டது. இந்தச் சூழலில் தற்போது அந்த நிலம் மீட்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE