மதுரை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த நியூட்ரினோ வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு மேலும் அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனி பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தடைக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 2015ல் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "நியூட்ரினோ திட்டத்துக்காக தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் 1,000 மீட்டர் ஆழத்துக்கு சுரங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இத்திட்டத்தால் தேனி பகுதியில் நிலவளம் அழியும். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பசுமைத் தொடர்களுக்கும் பேரழிவு ஏற்படும். விவசாயம், தண்ணீர், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும். மனித உயிர்களுக்கும் ஆபத்து நேரிடும். எனவே, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு 2015ல் விசாரணைக்கு வந்த போது, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடந்த விசாரணையின் போது நியூட்ரினோ திட்டத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
» வெள்ளலூர் நாடு பெரிய அம்பலக்காரர் பட்டம் கட்டும் விவகாரம்: ஆர்டிஓ உத்தரவுக்கு இடைக்காலத் தடை
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. அதற்கு நீதிபதிகள்,"நியூட்ரினோ திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளதா?" என கேள்வி எழுப்பினர். பின்னர் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.