வெள்ளலூர் நாடு பெரிய அம்பலக்காரர் பட்டம் கட்டும் விவகாரம்: ஆர்டிஓ உத்தரவுக்கு இடைக்காலத் தடை

By கி.மகாராஜன்

மதுரை: வெள்ளலூர் நாடு பெரிய அம்பலக்காரர் பட்டம் கட்டும் விவகாரத்தில் மேலூர் கோட்டாட்சியரின் (ஆர்டிஓ) உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா பழையூர்பட்டியை சேர்ந்த கருப்பையா அம்பலக்காரர், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "மேலூர் அருகே உள்ள வெள்ளலூர் நாடு 63 கிராமங்கள் ஐந்து மாகாணங்களாகக் கொண்டு 11 கரை அம்பலக்காரர்கள் மற்றும் 11 கரை அம்பலக்காரர்களில் ஒருவர் பெரிய அம்பலகாரராக தேர்வு செய்யப்படுவர். அவரது தலைமையில் வெள்ளலூர் நாட்டு திருவிழாக்கள் மற்றும் பொதுக் காரியங்கள் பண்பாடு மாறாமல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த 11 கரைகளும் 6 பேர் மக்கள், 4 பேர் மக்கள் மற்றும் 3 கரை மக்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 11 பெரிய அம்பலக்காரர்கள் நாட்டை நன்கு வழிநடத்தி பூர்த்தியாகியுள்ளனர். பெரிய அம்பலக்காரராக இருந்த மந்தையன் 2021ல் இறந்தார். அடுத்த பெரிய அம்பலக்காரரை தேர்வு செய்ய மூன்று கரை மக்களுக்கு ஈவு சொல்லப்பட்டது.

இந்தக் கரையில் பழையூர்பட்டி நண்டன்- கோப்பன் கரையைச் சேர்ந்த நான் பெரிய அம்பலக்காரராக தேர்வு செய்யப்பட்டேன். இந்நிலையில் சம்பட்டி வகையறாவைச் சேர்ந்த குறிஞ்சிக் குமரன் என்பவர் தான் 15.2.2024ல் பெரிய அம்பலக்காரராக தேர்வு செய்யப்பட்டதாகக் கூறினார். இதனால் பெரிய அம்பலக்காரர் பட்டம் கட்டும் பிரச்சினை மேலூர் கோட்டாட்சியரிடம் சென்றது.

கோட்டாட்சியர் பெரிய அம்பலம் பட்டம் கட்டுவது தொடர்பாக 7.8.2024ல் சமாதானக் கூட்டம் நடத்தினார். பின்னர், பெரிய அம்பலக்காரர் பட்டமானது சுழற்சி அடிப்படையில் ஆறு கரை, நான்கு கரை மற்றும் மூன்று கரை அம்பலக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் அடுத்ததாக சுழற்சி முறையில் வரும் ஆறு கரைகளுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரை பெரிய அம்பலக்காரராக தேர்வு செய்யலாம் என உத்தரவிட்டார்.

நான் ஏற்கெனவே பெரிய அம்பலக்காரராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், வேறு கரையை சேந்தவரை பெரிய அம்பலக்காரராக தேர்வு செய்ய வேண்டும் என்ற கோட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதுவரை உத்தரவை செயல்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், கோட்டாட்சியர் உத்தரவை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்தும், மனு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், மேலூர் கோட்டாட்சியர், மேலூர் வட்டாட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டும் விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE