அரூர்: தொடர் மழையின் எதிரொலியாக, அரூர் பகுதியில் கத்திரிக்காய் விளைச்சல் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால், சென்னைக்கு அனுப்பும் கத்திரிக்காய் மூட்டைகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது.
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் அதிக அளவில் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. குறிப்பாக வரட்டாறு அணையின் கீழ்பகுதியில் அமைந்துள்ள கீரைப்பட்டி, தாதராவலசை, வாழைத்தோட்டம், வள்ளி மதுரை உள்ளிட்ட சுற்று பகுதி கிராமங்களில் நீர் வளம் உள்ளதால் தக்காளி, கத்திரி, வாழை, குடைமிளகாய், பாக்கு உள்ளிட்டவைகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றது.
தற்போது, இப்பகுதியில் சுமார் 80 ஏக்கர் பரப்பில் துருவா ரக கத்திரிக்காய் பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் விளைவிக்கப்படும் கத்திரிக்காய்க்கு சென்னை காய்கறி மார்க்கெட்டில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இதனால், தினசரி 30 டன் கத்தரிக்காய், வேன்கள் மூலமாக சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 6 நாட்களாக இப்பகுதியில் தொடர்ச்சியாக, கன மழை பெய்து வருகிறது. தற்போது பூக்கள் பிடித்து பிஞ்சு அதிகரிக்கும் பருவத்தில் கத்தரிச் செடிகள் உள்ளன. ஆனால், தினசரி பெய்து வரும் மழையால், பூக்கள் அனைத்தும் உதிர்ந்து விட்டதால், கத்தரிப்பிஞ்சு உருவாகாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக கத்திரி செடிகளில் காய்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.
» பெரியாறு குடிநீர் திட்டம் - 38 மேல்நிலை தொட்டிகளில் குடிநீர் ஏற்றி சோதனை ஓட்டம்
» சிசுவின் பாலினத்தை அறிவித்த யூடியூபர் இர்ஃபானுக்கு அரசு நோட்டீஸ்
இது குறித்து விவசாயிகள் கூறியது: “கடந்த வாரம் வரை அதிக எண்ணிக்கையிலான கத்தரிக்காய் மூட்டைகள் சென்னை மார்க்கெட்டுக்கு அனுப்பி வந்த நிலையில், தொடர் மழையால் விளைச்சல் பாதியாக குறைந்து விட்டது.
எனினும், சென்னை மார்க்கெட்டில் கத்தரிக்காய் மூட்டை வரத்து குறைந்ததால், கடந்த வாரம் வரை கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை விலை கிடைத்த நிலையில், தற்போது ரூ.25 முதல் ரூ.30 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இதன் மூலம் விளைச்சல் பாதிப்பினால் ஏற்பட்ட இழப்பை ஓரளவு ஈடுகட்ட முடிகிறது. எனினும், சென்னை மார்க்கெட்டுக்கு வழக்கமாக அனுப்பும் கத்திரிக்காய் மூட்டைகளின் எண்ணிக்கை தற்போது பாதியாக குறைந்துள்ளது” என்றனர்.