குளிர்பானம் குடித்து இறந்ததாக கூறப்படும் சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை: ஆட்சியர் உறுதி

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: செய்யாறு அருகே 10 ரூபாய் குளிர்பானம் குடித்ததால் உயிரிழந்ததாக கூறப்படும் சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கனிகிலுப்பை கிராமத்தில் வசிப்பவர் ராஜ்குமார். இவரது மனைவி ஜோதிலட்சுமி. இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களது மகள் காவியாஸ்ரீ(5). ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இவர், அதே கிராமத்தில் உள்ள கடையில் கடந்த 10-ம் தேதி 10 ரூபாய் குளிர்பான பாட்டில் ஒன்றை வாங்கிக் குடித்துள்ளார். அதைக் குடித்த சில நிமிடங்களில் வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து சிறுமியை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்துள்ளனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் சந்தேக மரண பிரிவில், தூசி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த சிறுமி காவியாஸ்ரீ.

இதுகுறித்து ராஜ்குமார் கூறும்போது, ''குளிர்பானம் குடித்ததால்தான் எனது மகள் உயிரிழந்துவிட்டாள். என் மகளுக்கு ஏற்பட்ட நிலை வேறு யாருக்கும் நிகழக்கூடாது. கலப்பட மற்றும் காலாவதியான குளிர்பான பாட்டில்களை விற்பனை செய்பவர்கள், தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் கூறும்போது, ''சிறுமி குடித்த குளிர்பானம், நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு நிறுவனம் தயாரித்து விநியோகம் செய்துள்ளது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து 30 பாட்டில்கள் வாங்கிவந்து, சம்பந்தப்பட்ட கடைக்காரர் விற்பனை செய்துள்ளார். 29 குளிர்பான பாட்டில்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. மீதமிருந்த ஒரு குளிர்பான பாட்டிலை கைப்பற்றி, ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளோம். ஆய்வு முடிவுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருவண்ணாமலை ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், ''10 ரூபாய் குளிர்பானத்தை குடித்ததால் சிறுமி உயிரிழந்துள்ளதாக பெற்றோர் கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குளிர்பான மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான அறிக்கை கிடைத்ததும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

காலாவதியான மற்றும் தரமற்ற குளிர்பானங்கள், பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் தின்பண்டங்களை வாங்கி உட்கொள்ள வேண்டாம் என அனைத்து அரசுப் பள்ளி மாணவ - மாணவியருக்கு ஆசிரியர்கள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாவட்டம் முழுவதும் கடைகளில் ஆய்வுசெய்து தரமற்ற குளிர்பானங்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.

முன்னதாக நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''சிறுமி குடித்த குளிர்பான மாதிரி பறிமுதல் செய்யப்பட்டு, பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குளிர்பானத்தில் நச்சுக் கலப்படம் இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் எழில்சிக்கயராஜா மற்றும் குழுவினர் ஆய்வுசெய்து, காலாவதியான குளிர்பானங்களை விற்பனை செய்யக்கூடாது என எச்சரித்தனர். இதேபோல், மாவட்டத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்து, காலாவதியான, கலப்படம் மற்றும் தரமற்ற குளிர்பானங்களை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE