அதிர்ச்சி... பணியில் இறந்த அக்னி வீரர்... ராணுவ மரியாதை வழங்காததால் சர்ச்சை!

By காமதேனு

பணியின் போது இறந்த அக்னிவீரருக்கு ராணுவ மரியாதை செலுத்தப்படாத சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம், மான்சா மாவட்டத்தைச் சேர்ந்த அமிரித்பால் சிங் என்பவர் அக்னி வீரர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணைந்திருந்தார். ஜம்மு காஷ்மீர் ரைபிள் படையில் பூன்ச் பகுதியில் அவர் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 11-ம் தேதி பணியில் இருந்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான பஞ்சாபுக்கு தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு ராணுவத்தின் சார்பில் அளிக்கப்படும் வழக்கமான மரியாதை அளிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி காஷ்மீர் மாநில முன்னாள் ஆளுநர் சத்திய பால் மாலிக் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராணுவத்தில் பணியாற்றும் அக்னிவீரர்கள்

இதனிடையே இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ராணுவம், அம்ரித்பால் தற்கொலை செய்து கொண்டதால் ராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இதனால் வழக்கமான நடைமுறைகளின்படி அவருக்கு ராணுவ மரியாதை வழங்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் அவருடன் பணியாற்றிய வீரர்கள், அம்ரித்பாலின் இறுதிச்சடங்கில் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்

கடந்த 2022-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அக்னிவீரர் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ராணுவத்தில் பணியாற்ற முடியும். இவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்கப்படாது. இந்த திட்டம் ராணுவத்தின் ஒட்டுமொத்த மன உறுதி மற்றும் தொழில் முறையைக் குறைத்து விடும் என முன்னாள் ராணுவ வீரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனிடையே அக்னிவீரர் திட்டத்தில் இணைந்து, உயிரிழந்த முதல் வீரர் அம்ரித்பால் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE