அமைச்சர் உதயநிதிக்கு சம்மன்... விசாரணைக்கு ஆஜராக உத்தரவு! நீதிமன்றம் அதிரடி!

By காமதேனு

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வரும் பிப்ரவரி 13ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாட்னா சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இதில், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், "சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. எனவே அதை வெறுமனே எதிர்க்க கூடாது. அது ஒழிக்கப்பட வேண்டும். சனாதன தர்மம் இயல்பாகவே பிற்போக்குத்தனமானது. சாதி மற்றும் பாலினத்தின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிறது. அடிப்படையில் சமத்துவம் மற்றும் சமூக நீதியை சனாதனம் எதிர்க்கிறது" என்றார்.

சனாதனத்தை கொள்ளை நோய்களுடன் ஒப்பிட்டு அதனை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியது பாஜகவினரை கொந்தளிக்கச் செய்தது.

சனாதன ஒழிப்பு மாநாடு.

அமைச்சர் உதயநிதி பேச்சால் மன உளைச்சலடைந்த, பாட்னா உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கௌசலேந்திர நாராயண் என்பவர், கடந்த செப்டம்பர் 4ம் தேதி பாட்னா தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர்ந்தார்.

உதயநிதி மீது, இந்திய தண்டனைச் சட்டம் 153 (ஏ), 295 (ஏ) 298, 500 மற்றும் 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு அமைச்சர் தொடர்புடையது என்பதால், எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி சரிகா வஹாலியா, அமைச்சர் உதயநிதி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் வரும் பிப்ரவரி 13ம் தேதி நேரில் அல்லது வழக்கறிஞர் மூலம் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என கடந்த 15ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE