பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள்: திண்டிவனத்தில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

By எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம்: திண்டிவனம் நகரம் முழுவதும் பாதாள சாக்கடை பணிக்காக பல்வேறு இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களால் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை சீரமைக்கக் கோரியும், திண்டிவனம் நகராட்சி மெத்தனப் போக்கையும் கண்டித்து திண்டிவனத்தில் காய்கனி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் பல்வேறு சங்கத்தின் சார்பில் இன்று கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டிவனம் முழுவதும் பாதாள சாக்கடை பணி நடைபெறுகிறது. இதற்காக திண்டிவனம் 33 வார்டுகளிலும் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு திண்டிவனம் முழுவதும் குண்டும் குழியுமாக மாறியது. இது சம்பந்தமாக பொதுமக்கள், வியாபாரிகள் சங்கத்தினர் நகராட்சி அதிகாரிகளுடன் சாலையை சீரமைக்க கோரியும் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது.

அதிமுக எம்எல்ஏ அர்ஜூணன் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டமும் நடைபெற்றது. ஆனாலும் சாலையை சீர் அமைக்காததும், மேலும் காய்கனி மார்க்கெட்டில் சுமார் 25 ஆண்டு காலமாக செயல்படாத கழிவறையை உடனடியாக சீர் செய்ய வேண்டும். மார்க்கெட்டில் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் பள்ளி மாணவருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி சுற்றி வரும் மாடுகளை உடனடியாக தடுக்க வேண்டும்.

காய்கறி வியாபாரிகளுக்கு தனி மார்க்கெட் அமைத்திட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திண்டிவனம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காய்கறி கடைகள் மட்டுமல்லாமல் மளிகைக் கடை துணிக்கடை நகைக் கடை போன்ற பல்வேறு கடைகளை வணிகர்கள் தானாகவே அடைத்து இப்போராட்டத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE