கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்  @அருப்புக்கோட்டை

By இ.மணிகண்டன்

அருப்புக்கோட்டை: கல்லூரி பேருந்து நிறுத்தத்தில், பேருந்துகள் நிற்காமல் போவதைக் கண்டித்து அருப்புக்கோட்டை அருகே அரசு கலைக்கல்லூரி மாணவ - மாணவியர் இன்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள செட்டிகுறிச்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிக்கு அருப்புக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து தினமும் 400-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியியர் படிக்க வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்துகள் எதுவுமே நிற்பதில்லை என்று கூறப்படுகிறது.அத்துடன், அரசுப் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்கும் மாணவ - மாணவியரை பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் ஏளனமாக பேசுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவ - மாணவியர் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் செட்டிகுறிச்சி பேருந்து நிறுத்தத்துக்கு முன்பாக அரசு பேருந்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்திரி மாணவ - மாணவியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அனைத்து அரசுப் பேருந்துகளும் கல்லூரி நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததைத் தொடர்ந்து மாணவ - மாணவியர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE