கொள்ளிடத்தில் தடுப்பணை; வெள்ளாற்றில் கதவணை - சிதம்பரம், குமராட்சி, புவனகிரியில் கடையடைப்பு! 

By க. ரமேஷ்

கடலூர்: கொள்ளிடம் மற்றும் வெள்ளாற்றில் கதவணை, தடுப்பணை கட்ட வலியுறுத்தி சிதம்பரம், குமராட்சி மற்றும் புவனகிரி வர்த்தகர் சங்கத்தினர் சார்பில் இந்த ஊர்களில் இன்று 3 மணி நேர கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இது குறித்து சிதம்பரம் வர்த்தக சங்கத் தலைவர் சதீஷ்குமார், செயலாளர் ஏ.வி. அப்துல் ரியாஸ் ஆகியோர் நம்மிடம் பேசுகையில், ''கொள்ளிடம் ஆற்றில், கருப்பூர் (கடலூர் மாவட்டம்) - மாதிரிவேளூர் (மயிலாடுதுறை மாவட்டம்) இடையே கதவணை அமைக்க ஆய்வுகள் மேற்கொண்டு, மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்ட நிலையில், கதவணை அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ள அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இதேபோல், மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு நிலுவையில் உள்ள, கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள ஆதிவராக நல்லூர் வெள்ளாற்றில் தடுப்பணை கட்டும் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது'' என்றனர்.

கடையடைப்பு போராட்டம் இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. பின்னர் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டன. இது போலவே, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட கோரி குமராட்சியில் வர்த்த சங்க தலைவர் தமிழ்வாணன் தலைமையில் கடையடைப்பு நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE