மதுரை: இலக்கு நிர்ணயித்து அபராதம் விதிப்பதை போலீஸார் கைவிடவேண்டும் என்று மதுரை ஆட்டோ தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தைச் சொல்லி காவல் துறையினர் இலக்கு வைத்து ஆன்லைன் அபராதம் விதிப்பதால் நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறோம். எனவே இலக்கு வைத்து அபராதம் விதிக்கும் முறையை போலீஸார் கைவிட வேண்டும் என மதுரை ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மாநகர் ஆட்டோ தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் தெய்வராஜ் நம்மிடம் பேசுகையில், ''மோட்டார் வாகனச் சட்டத்தை ஒருவர் மீறுகிறார் என்றால் அவர் அச்சட்டத்திலுள்ள எந்தப் பிரிவை மீறினார் என சம்மந்தப்பட்ட சட்டமீறல் செய்தவருக்கு தகவல் தெரிவித்து அதன் பின்னர் அபராதம் விதிக்கவேண்டும். ஆனால், மதுரை போக்குவரத்து காவல்துறையினர் கையில் செல்போனை வைத்துக் கொண்டு வாகனங்ளுக்கு ஆன்லைன் மூலமாக அபராதம் விதிக்கின்றனர்.
ஹெல்மெட் அணியவில்லை என்பதற்காக இத்தகைய அபராதத்தை விதித்தால் தவறில்லை. ஆனால், நின்றுகொண்டிருக்கும் வாகனங்களை எல்லாம் படம் பிடித்து, ரூ.1000, ரூ.2000 என எவ்வித சோதனையும் இன்றி இஷ்டத்துக்கு அபராதம் விதிக்கின்றனர். மேலும், ஆட்டோ ஸ்டாண்டில் இயங்காமல் நிற்கும் ஆட்டோக்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் விதிக்கப்பட்ட விவரம் மின் அஞ்சலாக வாகன உரிமையாளருக்கு செல்கிறது.
» காஞ்சிபுரத்தில் ரூ.6 கோடியில் ராஜாஜி சந்தை: முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்
பலர் தங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதை உடனுக்குடன் பார்ப்பதில்லை. மாதங்கள் கடந்து யதார்த்தமாக மேற்படி அபராதத்தை பார்க்கும்போது அது சரியான முறையில் விதிக்கப்பட்ட அபராதம் தானா? நாம் அந்த குற்றத்தை செய்தோமா என்ற புரிதல் இல்லாமல் போய்விடுகிறது. இதனால் மொத்தமாக ரூ.5,000, ரூ.10,000 என அபராதம் செலுத்த நேரிடுகிறது. மேலும், சில நேரங்களில் காருக்கு விதிக்கும் அபராதத் தொகையை ஆட்டோக்களுக்கும் விதிக்கிறார்கள்.
இதையெல்லாம் பார்க்கையில், போக்குவரத்து போலீஸாரால் விதிக்கப்படும் ஆன்லைன் அபராதங்கள் நியாயமானதாக இருப்பதாகத் தெரியவில்லை. காவல்துறை உயரதிகாரிகள் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அபராதம் விதிக்கவேண்டும் என இலக்கு வைத்து செயல்படுகின்றனர். இப்படி இலக்கு வைத்து செயல்படுவதால் பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள் பெரும் சிரமத்துக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகிறார்கள். எனவே. இலக்கு வைத்து அபராதம் வசூலிக்கும் போக்கை போலீஸார் தவிர்க்க வேண்டும்.
வாகனத்தை மாற்றி போடப்படும் அபராதம் குறித்து போக்குவரத்து இணை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தால் வாங்க மறுத்து ஆன்லைனில் புகார் செய்யுங்கள் எனச் சொல்லி அனுப்புகின்றனர். இதனால் கடுமையான மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே இஷ்டத்துக்கு அபராதம் விதிப்பதை போலீஸார் கைவிடவேண்டும்'' என்றார்.