சென்னை: சட்ட விதிகளை மீறி பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த, பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கு தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவில் தடை இருப்பதால் துபாய் மருத்துவமனையில் பரிசோதனை செய்து அறிவித்திருந்தார்.
பிரபல யூடியூபர் இர்ஃபான். கடந்த ஆண்டு ஆலியா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்துக் கொள்ள ஆவலாக இருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். மனைவியுடன் துபாய் சென்ற அவர் அங்குள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்து பிறக்க போகும் தனது குழந்தை குறித்து அறிந்து கொண்டார்.
இந்நிலையில், கடந்த 19-ம் தேதி தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை இர்ஃபான் வெளியிட்டார். அதில், தனது பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்து, நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். ஒருபுறம் இர்ஃபானுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தாலும், மற்றொருபுறம் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவிப்பது சட்டப்படி தவறு என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிவிப்பது சட்டப்படி கடுமையான குற்றமாகும். பெண் குழந்தைகள் கருவிலேயே கொல்லப்படுவதை தடுக்கவும், தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலும் இச்சட்டம் இந்தியாவில் கடுமையாக பின்பற்றப்படுகிறது. அதனை மீறி செயல்படும் மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
» சூசையார்பட்டினம் பங்குப் பேரவையில் ஆதிதிராவிட வகுப்பினருக்கும் இடம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
» ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 மாதத்தில் லஞ்சம் பெற்றதாக 13 அரசு அலுவலர்கள் கைது
இந்நிலையில், இர்ஃபான் மனவியுடன் துபாய் சென்று அங்குள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்து தனது பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியதை தொடர்ந்து, தனது யூடியூப் சேனலில் இருந்து அந்த வீடியோவை இர்ஃபான் நீக்கினார்.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: யூடியூபர் இர்ஃபான் துபாய் சென்ற போது, தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை ஸ்கேன் பரிசோதனை செய்து தெரிந்து கொண்டதாகவும், அதனை குடும்ப நிகழ்ச்சி ஒன்றின் போது அங்கு குழுமியிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.
அந்த நிகழ்வினை வீடியோவாக எடுத்து, கடந்த 19-ம் தேதி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை இதுவரை பல பார்வையாளர்கள் உலகம் முழுவதும் பார்த்தும் பகிர்ந்தும் உள்ளனர். இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும், அறிவிப்பதும் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் 1994 (PCPNDT ACT 1994) (Central Act 57 of 1994)-ன் படி தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயலால், தமிழகம் மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகும் வாய்ப்புள்ளது.
எனவே, இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மாநில அமலாக்க அலுவலர் மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரால் இர்ஃபானுக்கு மே 21-ம் தேதி பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த வீடியோவை நீக்குவதற்கு யூடியூப் தளத்துக்கும், சைபர் க்ரைம் பிரிவுக்கும் கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருவின் பாலினம் அறிவதும், அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள், ஸ்கேன் சென்ட்டர்கள், மருத்துவமனைகள் மீது இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.