உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!

By காமதேனு

பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்படும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது. இப்போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப்போட்டிகள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஏற்கெனவே ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடக்கிறது.

காளையுடன் அமைச்சர்கள் உதயநிதி, மூர்த்தி

ஜல்லிக்கட்டுப் போட்டியைக் கண்டு ரசிக்கும் அமைச்சர்கள் உதயநிதி, மூர்த்தி மற்றும ஆட்சியர் சங்கீதா

இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் சார்பில் காரும், சிறந்த காளைக்கு அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இந்த போட்டியில் 1,000 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

களத்தில் நின்று விளையாடும் காளை.

களத்தில் நின்று விளையாடும் காளை.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை சட்டம் ஒழுங்கு பிரச்சினையில்லாமல் வெற்றிகரமாக நடத்துவதற்கு ஐஜி அஸ்ரா கார்க் மேற்பார்வையில் டிஐஜி பொன்னி, எஸ்பிக்கள் சிவபிரசாத் (மதுரை), பாஸ்கரன் (திண்டுக்கல்), டோங்ரே பிரவின் உமேஷ் (தேனி) ஆகியோர் தலைமையில் 1,500 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், சீருடையிலும், சாதாரண உடைகளிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சீறிப் பாய்ந்து வந்த காளை.

இந்த போட்டியைக் கண்டுகளிக்க சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிப்ட் முறையில் தனி வாகனங்கள் அலங்காநல்லூர் அழைத்து வரப்படுகின்றனர். அவர்களுக்காக வாடிவாசல் அருகே பிரத்தியேக கேலரி அமைக்கப்பட்டுள்ளது.

அதுபோல், விஐபிகள் கேலரி, பார்வையாளர்கள் கேலரிகள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கான மருத்துவப் பரிசோதனை தொடங்கி நடைபெற்றது. பின்னர் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் , மூர்த்தி முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழியினை ஏற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE