சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாணவ, மாணவிகள் போதைப் பழக்கத்துக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற திட்டம்தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, சென்னை பல்கலைக்கழகத்தில் போதைப் பழக்கத்துக்கு எதிராக உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முதல்வர் வாசித்த உறுதிமொழி விவரம்:
போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை முழுமையாக அறிவேன். போதைப் பழக்கத்துக்கு நான் ஆளாகமாட்டேன். என் குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்துக்கு ஆளாகாமல் தடுத்து, அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன். போதைப் பழக்கத்துக்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.
தமிழகத்தில் இருந்து போதைப் பொருட்களை வேரறுக்க அரசுக்குதுணை நிற்பேன். மாநில வளர்ச்சிக்கும் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்.
» சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு: தேனி போலீஸார் நடவடிக்கை
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூற, மாணவ, மாணவிகள் பின்தொடர்ந்து வாசித்து, உறுதி ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி, திமுக எம்.பி. தயாநிதிமாறன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால், கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். உள்துறை செயலர் தீரஜ்குமார் வரவேற்றார். மதுவிலக்கு அமலாக்கத் துறை கூடுதல் டிஜிபி அமல்ராஜ் நன்றி கூறினார்.
விழாவில், போதைப் பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட போலீஸாருக்கு முதல்வரின் சிறப்பு காவல் பதக்கம் வழங்கப்பட்டது.
கஞ்சா வழக்கில் 605 பேரை கைது செய்து 1,876 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தேனி மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத், ரூ.1 கோடி மதிப்பிலான 538 கிலோகஞ்சாவை கைப்பற்றி, 49 கஞ்சாவியாபாரிகளை கைது செய்த சேலம் மாவட்ட மத்திய நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் பி.ஜெகநாதன், 1,130 கிலோ கஞ்சா, போதை பொருள், கஞ்சாஎண்ணெய் உள்ளிட்ட ரூ.11 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்து 92 பேரை கைது செய்த சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளர் ராஜ்குமார், ரூ.15 கோடி மதிப்பிலான 1,500 கிலோ கஞ்சா, 3,200 கிலோ குட்காவை கைப்பற்றி 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்த மதுரை தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் ஆர்.அருண், 241 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 10 பேரை பிடித்த ராமநாதபுரம் மாவட்டம் தனிப்பிரிவு தலைமை காவலர் ஆர்.துரை ஆகியோருக்கு முதல்வரின் சிறப்பு காவல் பதக்கத்தை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்