மோசடி செய்தவருக்கு ஜாமீன் வழங்க கூடாது: ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடிகை கவுதமி மனு

By KU BUREAU

ராமநாதபுரம்: ரூ.3.16 கோடி நில மோசடி வழக்கில் தன்னை ஏமாற்றிய அழகப்பனுக்குஜாமீன் வழங்கக் கூடாது என நடிகைகவுதமி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார்.

தனது சொத்துகளை நிர்வகித்து வந்த காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவர், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே துலுக்கன்குறிச்சி கிராமத்தில் 64ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுத்ததில் ரூ.3.16 கோடி மோசடி செய்துவிட்டதாக, கடந்த மே மாதம் நடிகைகவுதமி, ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்ததுடன், நேரில்ஆஜராகி விளக்கமும் அளித்தார்.

அதன்படி, ராமநாதபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த மே மாதம் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் ‘செபி’ நிறுவனம் பதிவு செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்த 64 ஏக்கர் நிலத்தை அழகப்பன் வாங்கிக் கொடுத்து ரூ.3.16 கோடி முறைகேடு செய்துள்ளார். மேலும் இதில் அழகப்பன், அவரது மனைவி நாச்சாள், மகன்கள் சொக்கலிங்கம் அழகப்பன், சிவ அழகப்பன், மருமகள் ஆர்த்தி அழகப்பன், நெல்லியான், ஜோசப் ஜெயராஜ், பாக்கியசாந்தி, ஜெயபாலன், சந்தான பீட்டர், ரமேஷ் சங்கர் சோனாய், பாஸ்கர், விசாலாட்சி ஆகிய 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை, ராமநாதபுரம் ஜே.எம்.எண்-2 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் அழகப்பன், அவரதுமனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது, என கவுதமி, ராமநாதபுரம் நீதிமன்றத்துக்கு வந்து தனது வழக்கறிஞர் நாராயணன் மூலம் நேற்று மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, குற்றவியல் நடுவர் பிரபாகரன் வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இவ்வழக்கில் தொடர்புடைய அழகப்பன், நிலமோசடி வழக்கில் தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னர், செய்தியாளர்களிடம் கவுதமி கூறுகையில், ‘இவ்வழக்கு விசாரணையில் இருக்கும்போது நான் எதுவும் கூறமுடியாது. எனக்கு நடந்த இந்த அநியாயத்துக்கு எதிராக எத்தனை நாட்கள் ஆனாலும் இறுதிவரை போராடுவேன்’ என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE