“தமிழகத்தில் மின்கட்டண உயர்வால் ஜவுளித் தொழிலுக்கு கடும் நெருக்கடி” - சி.பி.ராதாகிருஷ்ணன்

By இல.ராஜகோபால்

கோவை: “மின்கட்டண உயர்வால் தமிழகத்தில் ஜவுளித் தொழில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. முதலீடுகள் வேறு மாநிலம் அல்லது வெளிநாடுகளுக்கு செல்லாமல் தமிழக அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்” என, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று (ஆக.12) அவர் கூறியதாவது: “வங்கதேசத்துடன் நீண்ட நெடிய உறவு நமக்கு இருந்த போதும், எப்போதெல்லாம் வங்கதேசத்தில் மதவாத சக்திகளின் கை ஓங்குகிறதோ அப்போது நம் தேசத்தோடு இருக்கும் நெருக்கத்தும், உறவுக்கும் சவால் வருகிறது. இதை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். உலக அமைதிக்கு வங்கதேசம் - இந்தியா உறவு மிக மிக முக்கியமானது. மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன்.

தமிழக அரசு தொடர்ந்து மின்கட்டணத்தை உயர்த்துவதால் ஜவுளித்தொழில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இத்துறை வளர்ச்சிக்கு உதவ தமிழக அரசு அதிக உதவிகளை செய்ய வேண்டும். வங்கதேசம், வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் ஜவுளித்தொழில் சிறப்பான வளர்ச்சி பெற்று வருகிறது. பர்மாவில் கூட ஜவுளி தொழில் ஒரு புதிய எழுச்சியை பெற்றுள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள ஜவுளித்தொழில் வேறு நாடுகளுக்கோ அல்லது வேறு மாநிலங்களுக்கோ சென்றுவிடக் கூடாது. அதற்கேற்ப நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். போதை பொருட்கள் அதிகம் பறிமுதல் செய்தால் அத்தகைய பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக தான் நாம் பார்க்க வேண்டும்.

தமிழக முதல்வர் மேற்கொண்டுள்ள போதை ஒழிப்பு நடவடிக்கைகளை வரவேற்கிறேன். அனைவரும் வரவேற்க வேண்டும் என கருதுகிறேன்” என்றார். பொன்மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு, “பொன் மாணிக்கவேல் வழக்கு எந்த சூழலில் ஏற்பட்டது என தெரியவில்லை. சோதனைகள் முடிந்து இருக்கிறது. அதற்குப் பிறகு எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டதாக தெரியவில்லை, பொறுத்திருந்து பார்ப்போம்” என பதிலளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE