புதுச்சேரி: அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ படிக்க விரும்பாத மாணவர்களுக்கு தமிழக பாடத்திட்டத்தில் படிக்க தொகுதி தோறும் ஒரு பள்ளி திட்டத்தை அமல்படுத்தக் கோரிய என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏ-க்களின் கோரிக்கையை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் நிராகரித்தார்.
புதுவை சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:
ஏ.கே.டி.ஆறுமுகம் (என்.ஆர்.காங்): "புதுவையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயில விரும்பாத மாணவர்களுக்கு தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயில தொகுதிதோறும் ஒரு பள்ளி என்ற திட்டத்தை அரசு செயல்படுத்துமா?" என்று கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் நமச்சிவாயம்: ”அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்யவே சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயில தொகுதிதோறும் ஒரு பள்ளி என்ற திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் தற்போது இல்லை" என்றார்.
» மாதம் 1,000 நாய்களைப் பிடிக்க இலக்கு: 'பட்டர்ஃபிளை' கூண்டுடன் களமிறங்கிய மதுரை மாநகராட்சி!
ஏ.கே.டி.ஆறுமுகம்: "தமிழக பாடத்திட்டத்தின் கீழ் படிக்க வேண்டும் என மாணவர்கள் விரும்புகின்றனர். தமிழ் வழியில் படிக்க வாய்ப்பு வழங்க வேண்டும். என்னை அணுகிய பல பெற்றோர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிகளை தொடங்க வேண்டும் என்கின்றனர். அதில் எளிதாக படிக்க முடிகிறது என்பது அவர்களின் கருத்து. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி போதாத சூழல் உள்ளது" என்றார்.
இதனைத் தொடர்ந்து திமுக எம்எல்ஏ-க்கள் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று, “சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழில் படிக்க வழியில்லை. ஏற்கெனவே நாங்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அவசர கதியில் அரசு நிறைவேற்றியதாக கூறியுள்ளோம். ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி இல்லை. இதனால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கான கட்டமைப்பும் அரசு பள்ளிகளில் இல்லை” என்று குற்றம்சாட்டினர்.