அதிமுகவின் திட்டங்களையே திமுக அரசு செயல்படுத்துகிறது - முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் பரபரப்பு

By பெ.ஜேம்ஸ் குமார்

பல்லாவரம்: திமுக ஆட்சியில் புதிய அறிவிப்புகள் மட்டுமே உள்ளது, மற்றபடி அதிமுக அரசின் திட்டங்களைத் தான் திமுக அரசு செயல்படுத்துகிறது என்று முன்னாள் அமைச்சர் பா.பெஞ்சமின் கூறியுள்ளார்.

மக்கள் பணிகளை முறையாக நிறைவேற்றாத தாம்பரம் மாநகராட்சியைக் கண்டித்து பல்லாவரம் ரயில் நிலையம் அருகே பல்லாவரம் பகுதி அதிமுக சார்பில் பகுதி செயலாளர் த.ஜெயபிரகாஷ் ஏற்பாட்டில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ப.பெஞ்சமின் பேசியதாவது: "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட முத்தான திட்டமான அம்மா உணவகத் திட்டத்தை மழுங்கடிக்கும் நோக்கில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, பல்லாவரம், கீழ்க்கட்டளையில் உள்ள அம்மா உணவகங்கள் மிகவும் மோசமாக உள்ளன. தரமான உணவு வழங்கப்படுவதில்லை. கரோனா காலக் கட்டத்தில் ஒன்பது மாத காலம் அம்மா உணவகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு பசியாறும் வகையில் இலவசமாக உணவு வழங்கப்பட்டன.

தற்போது இந்த அம்மா உணவகங்களை அழிக்கும் நோக்கில் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சென்னையை விரிவாக்கம் செய்த ஜெயலலிதா, விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினார். ஆனால், இந்த அரசின் ஆட்சியில் அறிவிப்பு மட்டுமே இருக்கிறது. இது தவிர அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சிக்கு உண்டான அடிப்படை பணிகள் ஏதும் மேற்கொள்ளாத நிலையில், வரிகளை மட்டும் மாநகராட்சிக்கு நிகராக வசூலிக்கிறார்கள். இதனை கண்டித்து தான் இன்றைக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கான பெயர் பலகைகளையும் கல்வெட்டுகளையும் மறைக்கிறது திமுக அரசு. பல்லாவரத்தில் நீர்நிலைகள் தற்போது நாசமாகி கொண்டிருக்கின்றன. போதை ஆசாமிகளின் கூடாரமாக பூங்காக்கள் இருக்கின்றன. அதிமுக ஆட்சி காலத்தில் பல்லாவரம், தாம்பரம், வண்டலூர் உட்பட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட மேம்பாலங்கள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. ஆனால், திமுக அரசு எந்தப் பணியும் செய்யவில்லை. மாறாக அதிமுக அரசின் திட்டங்களைத்தான் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு நாவடக்கம் தேவை. தமிழகத்திலே அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமை அதிமுகவுக்கே உண்டு. தமிழக மக்களால் போற்றப்படும் 2 கோடி தொண்டர்களின் இதயத்தில் உள்ள ஜெயலலிதாவை பேசுவதற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. சோதனைகளை கடந்து வெற்றி வாகைசூடிய இயக்கம் அதிமுக. தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமை நிச்சயம் மாறும். 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். பழனிசாமி மீண்டும் முதல்வராவார்; இது உறுதி" என்று பெஞ்சமின் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE