அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை தைக்கும் பணி: தனியாருக்கு கொடுப்பதை நிறுத்தக் கோரி கையெழுத்து இயக்கம்

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சீருடை தைக்கும் பணியை தனியாருக்கு கொடுப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மதுரையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தைக்கும் பணியை தனியாருக்கு வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். அந்தப் பணியை சமூக நலத்துறைக்குட்பட்ட தையல் தொழிற்சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என மதுரை மகளிர் தையல் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் மோகன் தலைமையில் இன்று சொக்கிகுளத்திலுள்ள மகளிர் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் முன்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கையெழுத்து இயக்கத்தை சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.தெய்வராஜ் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ரா.லெனின், மாவட்டச் செயலாளர் சித்ரா, மாவட்டப் பொருளாளர் ஜெ.லூர்துரூபி, நிர்வாகிகள் ஆயிஷா, நாகலெட்சுமி, மும்தாஜ், சுகந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், அரசுப்பள்ளி மாணவ - மாணவியருக்கு பள்ளி சீரூடை தைக்கும் பணியில் சமூக நலத்துறைக்குட்பட்ட 99 மகளிர் தையல் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் தமிழக அரசு பள்ளிச்சீருடை தைக்கும் பணியை தனியாருக்கு கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தும் தமிழக அரசு, பள்ளிச்சீருடை தைக்கும் பணியை தனியாருக்கு கொடுக்கும் திட்டத்தை கைவிடவேண்டும். மேலும், 2014-15ஆம் ஆண்டு முதல் உயர்த்தாமல் உள்ள தையல் கூலியை 5 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும்.

பள்ளியில் சென்று குழந்தைகளை அளவெடுத்து வருவதற்கான பயணம், உணவு உள்ளிட்ட செலவுகளை ஏற்க வேண்டும். கூலி ரூ 4-லிருந்து ரூ.10-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தையல் கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்களை சேர்க்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் சமூக நலத்துறை அலுவலரிடம் மனு அளித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE