இரண்டு நாட்களாகக் கடும் மழை, நீலகிரி மலைத்தொடரை உலர விடாமல் தொடர்ந்து நனைத்துக்கொண்டிருந்தது. குன்னூரிலிருந்து ஊட்டி செல்லும் மலை ரயிலில் கௌதமும் நந்தினியும் ஏறியபோதும் மழை பெய்துகொண்டிருந்தது. கௌதம் ஜெர்கின் அணிந்திருந்தான். நந்தினி ஸ்வெட்டரின்றி நீல நிறத்தில் சல்வார்கமீஸ் அணிந்திருந்தாள். அந்தப் பெட்டியில் அவர்களைத் தவிர வேறு யாருமில்லை.
கௌதம், “மழைக்கு மக்கள் வீட்டுலயே முடங்கிட்டாங்க” என்றபோது நந்தினி தன் கூந்தலை உதற, கூந்தலிலிருந்து மழைத்துளிகள் கௌதமின் முகத்தில் சிதறின. கௌதம், “கடவுளே…” என்று கண்களை மூடித் திறந்தான். ரயில் புறப்பட்டவுடன் நந்தினி வேகமாக ஜன்னல் கதவுகளைத் திறந்துவிட்டாள்.
“ஏய்… ஏன் ஜன்னல திறக்கிற?”
“மழைச்சாரலில் நனைவோம் நண்பா” என்று நந்தினி உற்சாகத்துடன் தூய தமிழில் கூறியபடி ஜன்னலோரம் அமர்ந்தாள். கௌதம் அவள் எதிரில் அமர்ந்தபடி, “ஏய்… என்ன, எதாச்சும் சரித்திரக் கதை எழுதிட்டிருக்கியா?”
“இல்ல. மழைல குஷியாய்ட்டேன். அதான் தமிழ்த் தாய் நாக்குல விளையாடுறா” என்றவளின் கன்னத்தில் ஜன்னல் வழியாக மழைத்துளிகள் விழுந்து கன்னத்தை நனைத்து, கழுத்தை நனைத்து, ஆடையை நனைத்தன. இரண்டு பக்கமும் பச்சைப் பசேலென்று தெரிந்த பெயர் தெரியாத மரங்கள், புதர்ச்செடிகள், தூரத்து ஊரில் தெரிந்த கட்டிடங்கள் என்று எல்லாவற்றையும் ரசித்தபடி ஒன்றும் பேசாமல் வந்தார்கள்.
வெலிங்டன் தாண்டியவுடன், நந்தினி எழுந்து பெட்டியின் மூலைக்குச் சென்று அமர்ந்து ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி நனைந்தாள். கௌதமும் எதிர்ப் பக்க மூலையில் அமர்ந்து ஜன்னல் வழியாகத் தலையை வெளியே நீட்டினான். எதிர்க் காற்றில் சுள்சுள்ளென்று மழைத்துளிகள் முகத்தில் ஊசிபோல் குத்தின. கௌதமைப் பார்த்து சிரித்த நந்தினி பொய்யாக காதில் செல்போனை வைத்துக்கொண்டு, “ஹலோ… நான் நந்தினி பேசுறேன்” என்றாள் சத்தமாக. மனதுக்குப் பிடித்தவன் அருகில் இருக்கும்போது பெண்கள் பெரும்பாலும் குழந்தைகள் போலவே இருக்கப் பிரியப்படுகிறார்கள். கௌதமும் குழந்தையாக மாறி வெறும் கையைக் காதில் வைத்து, “ஹலோ…நான் கௌதம் பேசுறேன்” என்றான்.
“இந்த ஜன்னல்ல மழை பெய்யுது? அந்த ஜன்னல்லயும் மழை பெய்யுதா?” என்றாள் சிரிப்புடன்.
கௌதம், “ஆமாம் இங்கயும் பெய்யுது” என்றபோது ரயில் பாதையை ஒட்டியிருந்த ஒரு மரக்கிளை நந்தினியின் பின் தலையில் மோதிவிட்டது. கௌதம் பதற்றத்துடன், “நந்தினி” என்று கத்த, நந்தினி தலையை இழுத்துக் கொண்டாள். கௌதம் வேகமாக எழுந்து ஓடினான். “ஏய்… என்னாச்சு?” என்று வேகமாக அவள் தலையைச் சாய்த்துப் பின்பக்கம் பார்த்தான். ரத்தக்காயம் ஏதுமில்லை. நந்தினி பின்தலையை அழுத்தித் தேய்த்துக்கொண்டாள். “இரு. நான் தேய்ச்சுவிடுறேன்” என்ற கௌதம் அவள் தலையைத் தன் தோள் மீது சாய்த்துத் தேய்த்துவிட்டான். தேய்த்தபடி, “இன்னும் வலிக்குதா?”என்றான். இப்போது நந்தினிக்கு வலி சரியாகியிருந்தது. இருந்தாலும் வேண்டுமென்றே, “இன்னும் வலிக்குது” என்றாள். கௌதம் நன்கு தேய்த்துவிட்டான்.
அரவங்காடு ஸ்டேஷன் நெருங்க, இருவரும் விலகிக்கொண்டனர். அரவங்காடு ஸ்டேஷனைத் தாண்டியவுடன் வந்த ரயில்வே க்ராஸிங்கில் ஒரு பள்ளி வேன் நின்றுகொண்டிருந்தது. சீக்கிரமே பள்ளி விட்ட உற்சாகத்தில் குழந்தைகள் ஜன்னல் வழியாகத் தலையை நீட்டி, ரயிலில் சென்ற பயணிகளைப் பார்த்துக் கத்தியபடி கைகளை ஆட்டினார்கள். நந்தினியும் குதூகலத்துடன் “ஊ” என்று கத்தியபடி அவர்களை நோக்கிக் கை காட்டினாள்.
கேத்தி ஸ்டேஷன் நெருங்கியவுடன் அதன் அழகில் கௌதமும் நந்தினியும் பிரமித்துவிட்டனர். மற்ற இடங்களில் இருப்பதுபோல் ஸ்டேஷனில் நடுவில் ரயில் நிலைய கட்டிடம் இல்லை. நடைபாதை ஆரம்பிக்கும் இடத்திலேயே மழையில் நனைந்தபடி நீல நிறத்தில் கட்டிடம் ஈரமாகக் காட்சியளித்தது. நடைபாதை கல் பெஞ்சுகளில் மழை ஈரத்தில் விழுந்து கிடந்தன பூக்கள். ஸ்டேஷனை ஒட்டியிருந்த பள்ளி மைதானத்தில் சில மாணவர்கள் நனைய, ஒரு ஆசிரியர் அவர்களை விரட்டிக் கொண்டிருந்தார்.
“கேத்தி சூப்பரா இருக்குல்ல? பேசாம இறங்கிடலாமா?” என்றாள் நந்தினி, கௌதம் “ம்” என்று எழுந்தான்.
இருவரும் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து சரிவில் இறங்கினார்கள். மழை, தூறலாக வீசிக்கொண்டிருக்க, கௌதம் குடையைப் பிரிக்க முயல, நந்தினி “வேண்டாம்” என்று தடுத்துவிட்டாள். தெருவில் யாருமில்லை. நந்தினி தலையை மேல் நோக்கிச் சாய்த்து முகத்தில் மழைநீரை வாங்கியபடி, “தஞ்சாவூர்ல இந்த மாதிரி மழைல நடக்க முடியாது. நான் கீழவாசல்ல நனைஞ்சுகிட்டு நடந்தா, பத்தே நிமிஷத்துல சீனிவாச நகர்ல இருக்கிற எங்கப்பாவுக்குத் தெரிஞ்சிடும்” என்றாள்.
கேத்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்பாக இடப்பக்கம் திரும்பினால், உல்லாடா கிராமம் வந்தது. தெருவை ஒட்டியிருந்த குமார் மெஸ்ஸில், மழைக்கு ஒதுங்கி டீ குடித்துக்கொண்டிருந்த ஒருபெரியவரைத் தவிர வேறு யாருமில்லை. இருவரும் டீ குடித்துவிட்டு அருகில் இருந்த மாரியம்மன் கோயிலை நோக்கிச் சென்றனர். பக்கத்திலிருந்த வீட்டுக் கதவுகள் சாத்தியிருந்தன.
“ஐ… கோயில்” என்று நந்தினி வேகமாகக் கோயிலை நோக்கி ஓடினாள். கோயில் அருகில் சென்றவள் திரும்பி வந்து, “கதவு சாத்தியிருக்கு” என்றாள் ஏமாற்றத்துடன். அப்போது மழை வலுக்க, இருவரும் வேகமாக அருகில் இருந்த மரத்தடியை நோக்கி ஓடினார்கள். முகத்தில் வழிந்த மழை நீரை வழித்துவிட்டபடி நந்தினி, “மழை பெய்றப்ப மரத்தடில நிக்கக் கூடாதுன்னு சொல்வாங்க”என்றாள்.
“ஆனா தம்மடிக்கலாம்” என்று கௌதம் ஜெர்கினின் உள்பாக்கெட்டிலிருந்த சிகரெட் பாக்கெட்டையும் லைட்டரையும் எடுத்தான். மரத்தின் அடர்த்தியை மீறி மழைத்துளிகள் கீழே விழுந்தன. சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு புகையை இழுத்துவிட, அந்த மழைக்கு அருமையாக இருந்தது. அப்போது சிகரெட் மீது ஒரு மழைத்துளி விழ, “அய்யோ…” என்று சற்று நகர்ந்து சிகரெட்டை வாயில் வைத்தான். அப்போதும் மழைத்துளி விழ, மேலும் நகர்ந்தான். அங்கும் மழைத்துளி விழுந்தது. கௌதமின் தவிப்பைப் பார்த்த நந்தினி கௌதமுக்கு நேராக நின்றுகொண்டாள். தனது இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாகச் சேர்த்து கவிழ்த்து அவன் கண்களுக்கு நேராக வைத்து, சிகரெட் மேல் மழைத்துளி விழுவதைத் தடுத்தாள். வாயிலிருந்த சிகரெட்டிலிருந்து புகை வர, பின்னால் பெய்யும் மழைக்கு நடுவே கவிழ்த்த உள்ளங்கைகளுடன் ஈரமுகத்துடன் அருகில் தெரிந்த நந்தினியை உற்றுப் பார்த்தான். அப்போது இருவரது உடல்களும் லேசாக உரச, நந்தினி சட்டென்று கைகளை விலக்கி, நகர்ந்து சென்று நின்றுகொண்டாள்.
கௌதம் சிகரெட்டுடன் அவள் அருகில் சென்றான். அவள் தோள்கள் மீது கௌதமின் தோள்கள் உரசின. உடனே நந்தினி வேகமாக நான்கடி தள்ளி நின்று கொண்டாள். கௌதம் அதே இடத்தில் நின்றபடி மழையில் நனையும் சாலையைப் பார்த்தபடி சிகரெட் புகையை இழுத்து
விட்டான். பிறகு திரும்பிப் பார்க்க, இப்போது நந்தினி சற்று நெருக்கமாக இரண்டடி தொலைவில் இருந்தாள். நகர்ந்து வந்திருக்கிறாள் போல. புன்னகையுடன் கௌதம் வேண்டுமென்றே அவளுக்கு எதிர் திசையில் சற்றுத் தள்ளி நின்றுகொண்டான். பிறகு உடனடியாக கௌதம் திரும்பிப் பார்க்க, வேகமாகக் குதித்து நந்தினி அவனருகில் வந்ததை கௌதம் கவனித்துவிட்டான். வெட்கத்துடன் தலையில் அடித்துக்கொண்ட நந்தினி முகத்தைத் திருப்பிக்கொண்டாள். புன்னகையுடன் சிகரெட்டை வீசிவிட்டு கௌதம் அவள் அருகில் சென்று நின்றான். இப்போது அவள் நகரவில்லை. கௌதம் திரும்பி அவள் முகத்தைப் பார்த்தான். ஆனால், ஒரு நிமிடத்துக்கு மேலாகியும் ‘பார்த்தால் ஏதும் தவறு நடந்துவிடும்’ என்பதுபோல் நந்தினி, கௌதமைப் பார்க்காமல் கோயிலை, அந்த கிராமத்து வீடுகளை, வானத்தை என்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
கௌதம், “ஃபேஸ்புக்குல என் ஃப்ரெண்ட் ஒருத்தன் கவிஞர் மகுடேசுவரனோட ஒரு கவிதைய ஷேர் பண்ணியிருந்தான். அது இப்ப ஞாபகத்துக்கு வருது” என்றான். “என்ன கவிதை?” என்றாள் நந்தினி முகத்தைத் திருப்பாமல்.
“திரும்பி என் முகத்தைப் பாத்தாதான் சொல்வேன்” என்றான். திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாற்போல் நின்றுகொண்டாள் நந்தினி. ஆனாலும் அவனைப் பார்க்காமல் தலையைக் குனிந்துகொண்டாள். கௌதம் சிரிப்புடன் கவிதையைச் சொல்ல ஆரம்பித்தான்.
“நானும் நீ வந்ததிலிருந்தே
பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
அங்கே பார்க்கிறாய்
இங்கே பார்க்கிறாய்
எங்கோ பார்க்கிறாய்
மேலே பார்க்கிறாய்
கீழே பார்க்கிறாய்
பின்னால் பார்க்கிறாய்
முன்னால் பார்க்கிறாய்
பக்கவாட்டில் பார்க்கிறாய்”
என்ற கௌதம் அவளருகில் நெருங்கி, மழைச் சாரல் விழும் நந்தினியின் முகத்தைப் பார்த்தபடி,
“எப்போதுதான் என்னைப் பார்ப்பாய்?”
என்று முடித்தபோது சட்டென்று நிமிர்ந்த நந்தினி, “இப்ப பாக்குறேன்”என்று உற்று அவன் கண்களைப் பார்த்தாள். பார்த்துக்கொண்டேயிருந்தாள். கௌதம் தவித்துப்போனான். ‘கண்களில் காதல் ததும்பி வழிய, இமைகளைச் சிமிட்டாமல், அழகாகப் பார்த்துக்கொண்டேயிருக்கும் நந்தினி யைப் பார்த்தபடி வாழ்நாள் முழுவதும் இந்த மழைநாள் மரத்தடியிலேயே இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ’
(தொடரும்)
முழு தொடரை வாசிக்க: https://www.kamadenu.in/search#gsc.tab=0&gsc.q=kadhal-square&gsc.sort=