சோத்துப்பாறை அணை நிரம்பியதால் வராகநதி கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட அபாய எச்சரிக்கை

By என்.கணேஷ்ராஜ்

தேனி: தொடர் மழையால் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நிரம்பியது. இதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 9 கிமீ.தொலைவில் அமைந்துள்ளது சோத்துப்பாறை அணை. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் வராகநதியின் குறுக்கே இரண்டு மலைகளுக்கு குறுக்காக இந்த அணை கட்டப்பட்டுள்ளது.

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் இருந்து வரும் நீர் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் இங்கு தேக்கப்படுகிறது. பெரியகுளம், தென்கரை, லட்சுமிபுரம், தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் மற்றும் பாசன நீர் ஆதாரமாக விளங்குகிறது.

126.28 அடி உயரம் உள்ள அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை இல்லை. இதனால் அணைக்கான நீர்வரத்து பூஜ்ய நிலையிலே இருந்தது. கடந்த 10 நாட்களாக அணையின் இப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில் அணையின் முழுக்கொள்ளளவான 126.28அடியை இன்று எட்டியது.

இதனைத் தொடர்ந்து பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வராகநதி கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தற்பொழுது அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 49.63 கன அடியாக உள்ள நிலையில், அந்த நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழைக்கான வாய்ப்புள்ளதால் உபரி நீரின் அளவு அதிகரிக்கும் நிலை உள்ளது. ஆகவே ஆற்றங்கரையோர பகுதி மக்கள் ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் என நீர்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE