மேட்டூர்: மக்களின் வரிப்பணத்தில் கார் பந்தயம் நடத்த திமுக அரசு துடிக்கிறது, என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த ஆலச்சாம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட 4 புதிய வகுப்பறை கட்டிடங்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் நாளுக்குநாள் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. போதைப் பொருள் விற்பனையால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. இதை பலமுறை தெரிவித்தும், சுட்டிக்காட்டியும் திமுக அரசுஎந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மக்களின் தேவைகளை நிறைவேற்ற வழியின்றி, கார் பந்தயம் நடத்த திமுக அரசு தயாராகி வருகிறது. கார் பந்தயம் நடத்த இருங்காட்டுக்கோட்டையில் இடம் இருக்கும் போது, மக்கள் நடமாட்டமும், போக்குவரத்து நெருக்கடியும் மிகுந்த சாலையில், மக்களின் வரிப்பணத்தில் கார் பந்தயம் நடத்த திமுக அரசு துடிக்கிறது.
» முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு: 500 மையங்களில் 2 லட்சம் பேர் எழுதினர்
» ஆசிரியர் நியமனத்தில் மாவட்ட ஒதுக்கீடு வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
விளையாட்டுத் துறைஅமைச்சர் விளையாட்டாக இருப்பது வேதனை அளிக்கிறது. மக்களுடைய பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்வதை ஏற்க முடியாது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. விசைத்தறி தொழில் நசிந்துதொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் அனைத்து தொழில்களும் நசிந்து விட்டன.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டம், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் என மக்கள் பயன்பெறக்கூடிய நல்ல திட்டங்களை எல்லாம் முடக்கிவிட்டனர்.
முந்தைய ஆட்சியின் நல்ல திட்டங்களை தொடர்வது தான் நல்ல அரசாங்கமாக இருக்க முடியும். அதிமுக அரசின் திட்டங்களை செயல்படுத்த திமுக ஆட்சியாளர்களுக்கு என்ன மனத்தடை உள்ளது?
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின் கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி, குப்பை வரி என அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுகவில் இரு பெரும் தலைவர்கள் மறைவுக்குப் பிறகு, அவர்களின் வழியில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து, மக்களுக்கு நன்மை செய்து, இந்தியாவில் தமிழகத்தை உயர்ந்த இடத்துக்கு கொண்டு வந்தது அதிமுக தான்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அதிமுக எம்பி சந்திரசேகரன், நகர செயலாளர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்