சென்னை: கரோனா பேரிடரில் சேவையாற்றி தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவி திவ்யாவுக்கு சுதந்திர தினத்தில் அரசு வேலைக்கான ஆணையை முதல்வர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளைவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா பேரிடர் காலத்தில் சேவையாற்றிய ஆயிரக்கணக்கான அரசு மருத்துவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதோடு 11 அரசு மருத்துவர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த அரசு மருத்துவர்களில் ஒருவர் தான், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் காது, மூக்கு தொண்டைநிபுணராக பணியாற்றி வந்த மருத்துவர் விவேகானந்தன். தனக்கு நிவாரணமும், அரசு வேலையும் கேட்டு, விவேகானந்தனின் மனைவி திவ்யா குழந்தைகளுடன், அமைச்சரை 3 தடவை நேரில் சந்தித்து வேண்டினார். கணவரை இழந்து தவிக்கும்தனக்கு அரசு வேலை வேண்டி, கண்ணீருடன் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.
திவ்யா விவேகானந்தனுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்த பிறகும் அரசு கருணை காட்டவில்லை. எனவே வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று, கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர்விவேகானந்தன் மனைவிக்கு அரசுவேலைக்கான ஆணையை, முதல்வர் வழங்கிட வேண்டுகிறோம்.
» ‘அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள்’ - சென்னையில் ஓவிய கண்காட்சியை தொடங்கி வைத்த ஆளுநர்
» ரூ.50 கோடியில் மழைநீர் வடிகால் பணி: நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஆய்வு
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்