முக்கிய கூட்டம்... செல்போனில் கேம் விளையாடிய முதல்வர் - வைரல் புகைப்படம்!

By காமதேனு

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல், தனது செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததாக ஒரு புகைப்படத்தை பாஜக வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சத்தீஷ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17-ந் தேதிகளில் இரு கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. இதற்காக, காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வுக் குழுவின் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. அதில், மேலிட பொறுப்பாளர் குமாரி செல்ஜா, மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேர்வுக்குழு தலைவர் அஜய் மக்கான், காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார்.

பூபேஷ் பகேல்

அப்போது, முதல்வர் பூபேஷ் பகேல், தனது செல்போனில் 'கேன்டி கிரஷ்' விளையாடிக் கொண்டிருந்ததாக ஒரு புகைப்படத்தை பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா வெளியிட்டார். ''காங்கிரஸ், ஆட்சியை தக்கவைக்காது என்று தெரிந்ததால், பாகல் பதற்றமின்றி இருக்கிறார்'' என்றும் அவர் கூறியிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள முதல்வர் பூபேஷ் பகேல், "இதற்கு முன்பு நான் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடியதையும் பா.ஜனதா ஆட்சேபித்தது. தற்போது, கூட்டம் தொடங்குவதற்கு முன்பு செல்போனில் 'கேன்டி கிரஷ்' ஆடியதையும் எதிர்க்கிறது. நான் தொடர்ந்து விளையாடுவேன். யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்." என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE