திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மூன்று இடங்கள் கேட்கப்பட்டது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் தான் திமுகவைக் கண்டித்து தேமுதிக போராட்டம் அறிவித்துள்ளது என அரசியல் வட்டாரத்தில் செய்தி பரவி வருகிறது.
தேமுதிக தலைவராக இருந்த மறைந்த விஜயகாந்த், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மேல் மிகவும் அன்பும் பாசமும் கொண்டவர். அவருக்காக பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற நிகழ்வை நடத்தியவர். அதனால் இந்த நன்றியை மறக்காமல் விஜயகாந்த் மறைவுக்கு கருணாநிதியின் மகனான முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதி உபகாரம் செய்தார்.
விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்திற்கான செலவுகளை ஏற்றுக் கொண்டதுடன் விஜயகாந்த்தை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய உதவினார். அத்துடன் நேரடியாகச் சென்று விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிலையில் தேமுதிக சார்பில் திமுக கூட்டணியில் இணைவதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதை ஏற்று பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பேச்சுவார்த்தையின்போது தேமுதிக நிர்வாகிகள் வைத்த நிபந்தனைகள் திமுகவால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத அளவிற்கு இருந்திருக்கிறது.
ஆளும் தரப்பில் ஒரு 'சீட்' தருவதாக கூறியிருக்கிறார்கள். ஆனால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் என மூன்று தொகுதிகளும்; ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும், பிரேமலதா தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடியின் திருக்கோவிலுார் தொகுதியில் சட்டசபை இடைத்தேர்தல் நடந்தால், அதுவும் வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதையடுத்தே ஆளும் திமுக தரப்பு, 'கூட்டணி ஏற்கெனவே நிரம்பி வழிகிறது. ஆனாலும், ஏதாவது ஒரு இடம் கொடுக்கலாம் என நினைத்தால், உங்கள் எதிர்பார்ப்பு எங்கேயோ நிற்கிறது; அந்தளவுக்கு இடமில்லை எனக் கூறி பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு விட்டதாக தெரிகிறது.
அதையடுத்தே, ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் ஏற்படுத்திய வசதிகளை அழிக்கும் ஆளும் திமுக அரசு எனக் கூறி அக்கட்சியை எதிர்த்து, வரும் 20-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார் பிரேமலதா என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இதேபோல அண்மையில், அதிமுக தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அப்போது பிரேமலதா வைத்த நிபந்தனைகளைக் கேட்டு, பேச்சுவார்த்தை நடத்தவந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், வந்த வேகத்தில் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் அதிமுக தரப்பில் கூறுகிறார்கள்.
விஜயகாந்த் உடல்நலம் குன்றியபிறகு பிரேமலதா எடுத்த தவறான முடிவுகளாலும், தேமுதிகவின் சுயபலம் அறியாமல் நிபந்தனைகளை வைப்பதாலும்தான் இரண்டு பெரிய கட்சிகளான திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லாமல் போட்டியிட வேண்டிய நிலைமை கடந்த தேர்தல்களில் ஏற்பட்டது.
இன்னும் தங்களை மாற்றிக் கொள்ளாமல் அதே நினைப்போடு பிரேமலதா இருந்தால் விரைவில் கட்சி ஒன்றும் இல்லாத நிலைக்கு சென்று விடும் என தேமுதிக நிர்வாகிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
அயோத்தியில் கோயில் கட்ட மோடியைத் தான் ராமர் தேர்வு செய்தார்: அத்வானி திடீர் புகழாரம்!
அமலாக்கத்துறை நெருக்கடி... ஜன.18-ம் தேதி ஆஜராக அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 4வது முறையாக சம்மன்!
இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும்: மாயாவதிக்கு காங்கிரஸ் வேண்டுகோள்!
ராமர் கோயில் கும்பாபிஷேகம்... சர்ச்சைக்குள்ளான பெயர் பலகை!
திருநங்கை அப்சராவிற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு: பிரபல யூடியூபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!