பேச்சுவார்த்தை தோல்வி… திட்டமிட்டபடி ஆசிரியர்கள் நாளை போராட்டம்!

By காமதேனு

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், சென்னையில் நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) நாளை போராட்டம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை டிபிஐ வளாகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 1 மணி நேரம் 30 நிமிடம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்த 30 கோரிக்கைகளில், 9 கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வந்தது என்றும், ஆனால் அதை வாய்மொழியாகவே தெரிவித்து இருந்ததாகவும் பிரதிநிதிகள் கூறினர். எனவே ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

அண்மையில் ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தியதில் அன்பழகனார் கல்வி வளாகம் ஸ்தம்பித்து போனது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆசிரியர் இயக்கங்கள் மீண்டும் போராட்டத்தை அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE