மதுரை: போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படங்கள் தயாரித்தால் விருது, சான்றிதழ் வழங்கப்படும் என மதுரை மாநகர் காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரை மாநகர் காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: “மதுரை மாநகரில் போதை பொருட்களின் உபயோகத்தை முற்றிலும் ஒழிக்கும் விதமான காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களால் மதுரை மாநகருக்கு உட்பட்ட 156 உயர் நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளிலும், 32 கல்லூரிகளிலும் தொடர்ந்து போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது.
மதுரை மாநகரில் இந்தாண்டு இதுவரை 243 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 381 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் சுமார் 392 கிராம் கஞ்சா மற்றும் 53 வாகனங்கள், ரூ.5 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மாநகரில் குட்கா/ புகையிலை விற்பனை தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து கடைகளில் சோதனை நடத்தி அதில் குட்கா/ புகையிலை விற்பனையில் ஈடுபட்டு வந்த 174 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1285 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு, ரூ.23 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 126 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
போதை பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் பொருட்டு மதுரை மாநகரில் உள்ள அனைத்து உயர் நிலைப்பள்ளிகள், மேல் நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்பட்டு, மேற்படி குழுக்கள் மூலம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் ஓவியம், பேச்சு போட்டிகள், பட்டிமன்றம் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.
மேலும் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துக்களை தெரிவிக்கும் விதமாக மாணவர்கள்/ தன்னார்வலர்கள் 3 முதல் 5 நிமிடங்கள் வரையிலான குறும்படங்களை தயாரித்து, அதை cupmctn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சமூக ஊடகப்பிரிவில் நேரடியாக வரும் ஆக. 18 மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். சிறந்த முதல் மூன்று குறும்படங்களுக்கு காவல் ஆணையர் லோகநாதன் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குவார்” இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.