மதுரை பாண்டிகோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்: பயணிகள் அவதி

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: மதுரை பாண்டிகோவில் சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுமார் அரைமணிநேரம் தாமதமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், வாகனங்கள் புறப்பட்டு சென்றன

மதுரை பாண்டிகோவிலுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். அதனையொட்டி வழிபாடு கிடா வெட்டி வழிபாடு செய்து விருந்து சமைத்து உறவினர்களுக்கு வழங்கி மகிழ்கின்றனர். அதற்காக பாண்டிகோவில் சாலையில் சிறிதும், பெரிதுமாக நூற்றுக்கும் மேற்பட்ட மண்டபங்கள் உள்ளன.

மேலும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வழக்கத்தைவிட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். போதுமான ‘பார்க்கிங்’ வசதி இல்லாததால் விழாக்களுக்கு வந்த உறவினர்கள் இருசக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவற்றை சாலையின் இருபுறமும் ஓரங்களில் நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அரைமணி நேரத்திற்கும் மேலாக எந்த வாகனங்களும் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதித்தது.

தென் மாவட்டங்களில் இருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு வரும் அனைத்து பேருந்துகளும் அரைமணிநேரங்கள் தாமதமாகவே புறப்பட்டன. இதனால் பயணிகள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகினர். இதுபோல் வாரந்தோறும் நிகழ்கின்றன. இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண மாநகராட்சியும், காவல்துறையும் நெடுஞ்சாலைத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE