ஆவடி: ஆவடியில் பாதாளச் சாக்கடை அடைப்பை நீக்கும் பணியின்போது, ஒப்பந்த ஊழியர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம், பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, அருந்ததிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (25). இவருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர். கோபிநாத், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆவடி மாநகராட்சியில் பாதாளச் சாக்கடைகளை தூய்மைப் படுத்துதல், அடைப்புகளை நீக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட, ஆவடி, ஜெ.பி.எஸ்டேட்- சரஸ்வதி நகர் பகுதியில் பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதையடுத்து, அதனை ஜெட்ராட் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் நேற்று முதல் கோபிநாத் உள்ளிட்ட ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இதில், இன்று கோபிநாத், பாதாளச் சாக்கடையினுள் இறங்கி, ஜெட்ராட் எந்திரத்தின் குழாய் இணைப்பை பாதாளச் சாக்கடையினுள் இணைக்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, அவர் எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியதால், பாதாளச் சாக்கடையினுள் மயங்கி விழுந்தார். இதுகுறித்து, தகவலறிந்த ஆவடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்து, கோபிநாத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோபிநாத் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
» இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது வீராணம் ஏரி!
» சாதிய மோதல்களை தடுக்க நடவடிக்கை: திருநெல்வேலி சரக புதிய டிஐஜி தகவல்
இதையடுத்து, சம்பவ இடம் விரைந்த ஆவடி போலீஸார், கோபிநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.