உதகை: தமிழ்நாட்டில் 2,553 மருத்துவர்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். உதகையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
நாட்டில் முதல் முதலாக ஒரு மலைப் பிரதேச நகரில் 700 படுக்கைகள் கொண்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதகையில் அமைந்துள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட பல வசதிகள் கொண்டதாக இருக்கும். பழங்குடியின மக்களுக்கு பிரத்யேகமாக 50 சிறப்பு படுக்கைகள் கொண்ட பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அவசரகால மருந்து பெட்டகம்: இதய செயலிழப்பை தடுக்கும்வகையில், முதன்முறையாக 14 மாத்திரைகள் கொண்ட அவசரகால மருந்து பெட்டகம் தமிழகத்தில் 2,286 சுகாதார மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அது இதய நோய் பாதிப்பு ஏற்படுவதை முன்கூட்டியே தடுக்கிறது. இதனால் உடனடியாக உயிரிழப்பை தடுக்க முடியும்
தமிழ்நாட்டில் 2,553 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 986 மருந்தாளுநர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களுக்கான கவுன்சிலிங் ஏற்பாடுகள் நாளை தொடங்கஉள்ளது. அதேபோல், 1066 சுகாதாரஆய்வாளர்களை நியமிக்கும் பணியும் நடைபெறுகிறது. மதுரையில் ஒரு வழக்கு இருப்பதால், அதைமுடித்துவிட்டு விரைவாக சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
பழங்குடியினர் இடையே ரத்த சோகை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்த ஆய்வு நடத்த ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் செயல்பாடு வெற்றிகரமாக அமைந்துள்ளதால், விரைவில் மதுரை, கோவையிலும் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்
ஆய்வின்போது, நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, உதகை மருத்துவக் கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.