5 பல்கலை. துணைவேந்தரை உடனே நியமிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

By KU BUREAU

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழகங்களுக்கும் புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படாததால் அவற்றின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.

இவற்றில் பாரதியார் பல்கலைக்கழக மற்றும் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகள் சுமார் 2 ஆண்டுகளாக காலியாக உள்ளன. தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ்ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் (நேற்று) ஓய்வு பெறுவதையடுத்து, தமிழகத்தில் காலியாகவுள்ள துணைவேந்தர் பணியிடங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படவில்லை என்றால் அடுத்த ஆண்டுக்குள் 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் இன்றிதடுமாறும் நிலை உருவாகும். துணைவேந்தர்கள் இல்லாததால் இந்த பல்கலைக்கழகங்களில் கல்வி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.

துணைவேந்தர்கள் தேர்வுக் குழு, ஆட்சிக் குழு, பேரவைக் குழு ஆகியவற்றை நியமிக்கும் முறைகள், அதிகாரம் ஆகியவை குறித்த விதிகள் ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் மாறுபடுவதால், அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே மாதிரியான விதிகளை உருவாக்கும் வகையில் பொது பல்கலைக்கழக சட்டம் இயற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE