எப்போதும்வென்றான் அருகே பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து மாணவர் மரணம்

By சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: எப்போதும்வென்றான் அருகே பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த 7-ம் வகுப்பு மாணவர் மரணமடைந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே பொம்மையாபுரத்தைச் சேர்ந்த முத்து மகன் மகேந்திரன் (12). இவர் சிவஞானபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று (சனிக்கிழமை) காலை 11-ம் மணிக்கு பள்ளி இடைவேளையின்போது சக மாணவர்களுடன் வெளியே வந்த மகேந்திரன், திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, எப்போதும்வென்றான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவரைக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாணவர் மகேந்திரனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து எப்போதும்வென்றான் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துவிட்டு, மாணவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து எப்போதும்வென்றான் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விசாரித்தபோது, மாணவர் மகேந்திரன் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் இருந்து கீழே விழுந்து கிடந்த நாவல் பழத்தை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதை பார்த்த சக மாணவர்கள் உடனடியாக ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் மாணவர் மகேந்திரனை மீட்டு எப்போதும்வென்றான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர், என்பது தெரியவந்துள்ளது. ஆனாலும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபின்னரே மாணவர் மகேந்திரன் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழா கடந்த 5-ம் தேதி நடந்தது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 5-ம் தேதி அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக இன்று (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE