‘அதிக வாக்குகளுக்கு...’ - திமுக மகளிரணிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அட்வைஸ்

By க. ரமேஷ்

கடலூர்: “திமுகவில் பெண்களை அதிகளவில் உறுப்பினர்களாகச் சேர்த்து அவர்களை வாக்குகளாக மாற்ற வேண்டும்” என மகளிர் அணியினருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கியுள்ளார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஆக.10) மதியம் நடந்தது. தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பொறியாளர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார். மாவட்டப் பொருளாளர் எம்.ஆர்.கே.பி. கதிரவன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாவட்ட துணைச் செயலாளர் ஞானமுத்து, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரை.கி.சரவணன், ஒன்றியச் செயலாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றோம். 2026 தேர்தலுக்கு அதிக உறுப்பினர்களை சேர்த்த மாவட்டமாக கடலூர் கிழக்கு மாவட்டம் இருக்க வேண்டும்.

மகளிர் அணியினர் பெண்களை தினமும் சந்தித்து நமது முதல்வர் பெண்களுக்காக செய்த திட்டங்களை விளக்கிக் கூறி அவற்றை வாக்குகளாக மாற்ற வேண்டும். மகளிர் மற்றும் இளைஞர் அணியினர் இல்லம் தேடிச் சென்று அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

எல்லா அணிகளும் சிறப்பாகச் செயல்பட்டால் 2026 தேர்தலில் நாம் எளிதில் வெற்றி பெறலாம். பெண்களை வாக்குகளாக மாற்றுவதை இலக்காக வைத்து உழைக்க வேண்டும். 2026 தேர்தலில் புதிதாக சில அமைப்புகள் வரலாம். நாம் கிராமத்தில் 50 நபர்களை தேர்ந்தெடுத்து உறுப்பினர்களாக ஆக்கி அவர்களை கடுமையாக உழைக்க வைக்க வேண்டும். ஒரு லட்சம் மகளிரை உறுப்பினராக்க வேண்டும். ஒரு லட்சத்திற்கு மேல் இளைஞர்களை உறுப்பினர்களாக ஆக்க வேண்டும்.

கட்சிக்காக கடுமையாக உழைப்பவர்களை கண்டறிந்து, வரும் உள்ளாட்சி தேர்தலில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். மகளிர் உரிமைத் தொகை மூலம் குடும்பத் தலைவியும், புதுமைப்பெண் திட்டத்தில் மகளும், தவப்புதல்வன் திட்டத்தில் மகனும் என குடும்பத்தில் உள்ள அனைவருமே பயன்பெற்று வருகின்றனர்.

தந்தை ஸ்தானத்திலிருந்து நமது முதல்வர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆகவே நாம் இந்த சாதனையைச் சொல்லி மக்களிடம் வாக்குச் சேகரிக்க வேண்டும்” என்றார். இந்தக் கூட்டத்தில் கடலூர் மாநகர மேயர் சுந்தரி ராஜா, குறிஞ்சிப்பாடி ஒன்றிய திமுக செயலாளர் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE