புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுபடுத்த தமிழக அரசு இடம் கொடுக்கும்: முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை

By அ.முன்னடியான்

புதுச்சேரி: விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கு தமிழக அரசு இடம் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இடம் கிடைத்தவுடன் நிச்சயமாக புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுபடுத்த முடியும் என முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்

புதுச்சேரியில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மண்டல கவுன்சில் கூட்டம் நூறடி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு சிஐஐ உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது சிஐஐ அலுவலக பணியாளர்கள் முதல்வர் ரங்கசாமியிடம் புதுச்சேரி அரசு கூட்டு ஆலோசனை மன்றம், சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கான முதலீட்டு மானியத்துக்கும், தாமதமின்றி வணிகத்தைத் தொடங்குவதற்கு விரைவாக ஒப்புதல் தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: “புதுச்சேரியில் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு நிறைய மாணவர்கள் மருத்துவம், பொறியியல் படித்து முடித்துவிட்டு வெளியில் வருகின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது எங்களது எண்ணம்.

சிறிய மாநிலமான இங்கு அதிகமான கல்வியைக் கொடுக்கிறோம். ஆனால், வேலை கொடுப்பது சிரமமாக உள்ளது. படித்த இளைஞர்கள் வெளியே செல்ல ஆர்வம் காட்டுவதில்லை. புதுச்சேரியிலேயே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால் புதுச்சேரிக்கு நிறைய தொழிற்சாலைகள் வர வேண்டும், நிறைய தொழிலதிபர்கள் முதலீடு செய்ய வேண்டும் என்பது அரசின் எண்ணம். ஒரு சமயத்தில் இங்கு பெரிய, பெரிய தொழிற்சாலைகள் வந்தன.

அப்போது அவர்களுக்கு நிறைய சலுகைகள் கிடைத்தது. இப்போது வரிச் சலுகை இல்லாததால் பெரிய தொழிற்சாலைகள் வெளியே சென்றுவிட்டன. இருப்பினும், சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஆனால், பெரிய தொழிற்சாலை வந்தால்தான் நிறைய வேலைவாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக, ஐடி பார்க், மருந்து உற்பத்தி பூங்கா போன்றவை வரவேண்டும். கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்யும்போது, விரைவாக அனுமதி கிடைத்து தொழில் தொடங்க வேண்டும் என்பது தொழிலதிபர்களின் எண்ணம்.

அதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. இங்கு தொழிலாளர் பிரச்சினை ஒரு சமயத்தில் இருந்தது. அது தற்போது இல்லை. நல்ல சூழலில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பை அரசு உருவாக்கியுள்ளது. கரசூர், சேதராப்பட்டில் 750 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு மாஸ்டர் பிளான் தயாரிக்க ஒரு நிறுவனத்தை தேர்வு செய்துள்ளோம். ஏஎஃப்டி, பாரதி மற்றும் சுதேசி பஞ்சாலை வளாகத்தில் ரூ.105 கோடி முதலீட்டில் பிரதமரின் ஏக்தா மால் தொடங்க பரிசீலிக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் ஐடி பார்க் தொடங்குவதற்கும் பரிசீலிக்கப்படும். தொழில் தொடங்குவோர் புதுச்சேரிக்கு வர வேண்டும் என்றால் விமான சேவை அவசியமான ஒன்று. சுற்றுலா பயணிகள் வெளிநாட்டில் இருந்து புதுச்சேரி வருவதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள்.

ஆனால், விமான நிலைய விரிவாக்கத்துக்கு போதிய இடமில்லை. இதனால் தமிழக அரசிடம் இடம் கேட்டுள்ளோம். விமான நிலையத்தில் ஓடுபாதையை விரிவுபடுத்தவும் ஆலோசனை கேட்டுள்ளோம். விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கு தமிழக அரசு இடம் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இடம் கிடைத்தவுடன் நிச்சயமாக விமான நிலையத்தை விரிவுபடுத்த முடியும். ரயில் சேவையும் மேம்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கான கப்பல் சேவை தொடங்கவும் துறைமுக முகத்துவாரத்தை ஆழப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். படித்த இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். இங்கு வேலை செய்வதற்கு திறமையான பிள்ளைகள் அதிகமாக இருக்கிறார்கள்.

எளிதாக தொழில் தொடங்குவதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளதோ அதை நடைமுறைப்படுத்த அரசு கவனம் செலுத்தும். விரைவில் 750 ஏக்கரில் தொழிற்பேட்டையை பயன்படுத்துவதற்கான நிலையில் அரசு நடவடிக்கை எடுக்கும். முதலீட்டாளர்கள் புதுச்சேரியை நம்பி தொழிற்சாலைகளை தொடங்க முன்வரலாம் . உங்களுக்கான சலுகைகளை அரசு கொடுக்கும்” என்றார்.

இந்த நிகழ்வில் சிஐஐ தென்மண்டல தலைவர் நந்தினி, துணை தலைவர் தாமஸ் ஜான் முத்துட், மண்டல இயக்குநர் ஜெயேஷ், சிஐஐ புதுச்சேரி தலைவர் சண்முகானந்தம், துணை தலைவர் சமிர் கம்ரா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE