திருச்சி விமான நிலையத்தில் சம்ஸ்கிருதத்தில் கல்வெட்டு: தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

By KU BUREAU

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையம் புதிய முனையத்தில் சம்ஸ்கிருதத்தில் கல்வெட்டு வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தை கடந்த ஜனவரி 2-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அதற்காக, தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியுடன் சம்ஸ்கிருதத்திலும் ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அலுவல் மொழியாக இல்லாத சமஸ்கிருதத்தில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டை அகற்ற வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ் தேசிய பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினர் மு.த.கவித்துவன் கூறியது: மத்திய அரசு மும்மொழிக்கொள்கைப்படி திருச்சி விமான நிலையத்தில் 3 மொழிகளில் மட்டுமே கல்வெட்டு வைத்திருக்க வேண்டும். 4-வதாக சம்ஸ்கிருதத்தில் கல்வெட்டு வைக்க வேண்டிய அவசியம் என்ன? இது கண்டிக்கத்தக்கது. எனவே, சம்ஸ்கிருதத்தில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டை உடனடியாக அகற்ற வேண்டும் என்றார்.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய இயக்குநர் ஜி.கோபாலகிருஷ்ணன் (பொறுப்பு) ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: இந்திய விமான நிலைய ஆணையம் தலைமையிலான குழுவினர் அறிவுறுத்தலின்படி, தமிழ்,ஆங்கிலம், இந்தியுடன் சேர்த்து, சமஸ்கிருத கல்வெட்டும் வைக்கப்பட்டது.

திறப்பு விழா முடிந்து இத்தனை நாட்கள் கழித்து எதிர்ப்பு கிளம்பியது ஏன் எனத் தெரியவில்லை. இதுதொடர்பாக இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE