சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து; கருத்து சுதந்திரத்துக்கு கடிவாளம் கூடாது: நீதிபதிகள் கருத்து

By KU BUREAU

சென்னை: சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், கருத்து சுதந்திரத்துக்கு குண்டர் தடுப்புச் சட்டம் மூலமாக கடிவாளம் போட நினைக்கக் கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெண் காவலர்களையும், காவல்துறை பெண் அதிகாரிகளையும் அவதூறாகப் பேசியதாக யூடியூபரான சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரப்பி, தமிழக அரசுக்கு எதிராக போராடத் தூண்டியதாக சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா, சென்னைஉயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர்அடங்கிய அமர்வில் நடைபெற்றது.

சவுக்கு சங்கர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.அய்யப்பராஜ், ‘‘சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவும், அவர் மீது தொடர்ச்சியாக போடப்பட்டுள்ள வழக்குகளும் உள்நோக்கத்துடன் பதியப்பட்டவை. அரசுக்கு எதிராகதொடர்ச்சியாக கருத்துகளை தெரிவித்து வருகிறார் என்ற காரணத்துக்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பல வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இந்தவழக்கில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன்வழங்கியுள்ளது’’ என வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல்குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், ‘‘பொது அமைதிக்குப் பங்கம் விளைவி்க்கும் வகையிலும்,தமிழக முதல்வர் மற்றும் தமிழகஅரசுக்கு எதிராகவும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறு பரப்பிய காரணத்துக்காகவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’’ என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவு:

பொது அமைதிக்கு குந்தகம் விளைவி்த்ததாக சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்ததற்கான காரணங்களை உத்தரவில் தெரிவிக்கவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் அவ்வளவு தீவிரமானதாகத் தெரியவில்லை. அவரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவில் உள்நோக்கம் இருப்பதால் அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

அரசுக்கு எதிராக கருத்துகளைதெரிவிப்போர் மீது உரிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்துக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தின் மூலம் கடிவாளம் போட நினைக்கக்கூடாது. தற்போதுள்ள இணையதள உலகில் பல தளங்களிலும் பல்வேறு தகவல்கள் வந்து குவிகின்றன.

அரசுக்கு எதிராக கருத்துகளை தெரிவிக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேரிட்டால், எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுப்பது, குடிமக்களிடமிருந்து பலதரப்பட்ட கருத்துகளை அரசு இயந்திரம் பெறாவிட்டால் அது உண்மையான ஜனநாயகமாக இருக்காது.

சமூக ஊடக பதிவுகளுக்கும், யூடியூப் பதிவுகளுக்கும் பின்னால் அரசு செல்வதாக இருந்தால், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை முடக்குவதாகவே கருத நேரிடும். இந்தப் போக்கு ஜனநாயகம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழக்கச் செய்து விடும். அரசுக்கு எதிராக கருத்துகளை தெரிவிக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் மூலம் அனைவருடைய குரலையும் ஒடுக்கிவிட முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகுதான் அரசின் செயல்பாடுகள் குறித்த விவாதங்களும் அதிகரித்துள்ளன. இது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமான ஒன்று. சாதாரண ஏழை, எளிய மக்களின் குறைகளைப் புரிந்து அதை வெளிப்படுத்தும் கருவியாக சமூக ஊடகங்களை அரசு கருத வேண்டுமேயன்றி, அவற்றை முடக்க அரசு முயற்சிக்கக் கூடாது.

ஆனால் மற்ற ஊடகங்களுக்குக் கட்டுப்பாடுகள் இருப்பதுபோல சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளைக் கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம். நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் மீண்டும் மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா, வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் தேவைப்படவில்லை என்றால் உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE