விபத்தில்லா தினம்: போக்குவரத்து போலீஸ் சார்பில் ‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்’ போட்டி: வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை அறிவிப்பு

By KU BUREAU

சென்னை: சாலைகளில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய, சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக‘ஜீரோ இஸ் குட்’ என்ற பெயரில் நகர் முழுவதும் வித்தியாசமான முறையில் விளம்பரம் மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து, விபத்து மற்றும் விபத்து உயிரிழப்புகளே இல்லாமல் அவற்றின் எண்ணிக்கை ஜீரோவாக இருக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து ‘ஜீரோ இஸ் குட்’ எனவிழிப்புணர்வு பிரச்சாரத்தை போக்குவரத்து போலீஸார் கையிலெடுத்தனர்.

இதற்கிடையே, ஆகஸ்ட் 26-ம்தேதி ‘விபத்தில்லா தினம்’ கொண்டாடப்பட உள்ளது. இதற்காக 20நாட்கள் தொடர் மெகா விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னை போக்குவரத்து போலீஸார் மேற்கொண்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக ‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்’ போட்டியை அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வாகன ஓட்டிகள், `போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுதல்', `பாதுகாப்பாக வாகன ஓட்டுதல்', `பாதசாரிகளின் பாதுகாப்பு மற்றும் சாலைப்பயணத்தில் நடத்தை மாற்றங்கள்' போன்ற கருப்பொருட்களை மையமாக வைத்து ரீல்ஸ்களை உருவாக்க வேண்டும். ரீல்ஸ்களைவரும் 20-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

போட்டியில் பங்கேற்பவர்கள் ‘விபத்தில்லா தினம்’ தொடர்பான எந்தவொரு தலைப்பிலும் 60 விநாடிகள் வரை ரீல்ஸை உருவாக்கலாம். பின்னர், சென்னை பெரு நகர போக்குவரத்து காவல் துறையினரால் வழங்கப்பட்ட கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி ZAD (விபத்தில்லா தினம்)ரீல்ஸ் டெம்ப்ளேட்டுகளைப் பதிவிறக்க வேண்டும்.

உங்கள் ரீல்ஸில் டெம்ப்ளேட்டை இணைத்து, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறையின் (@chennaitrafficpolice) அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தைக் குறிக்கவும். #zeroaccidentday, #ZAD,#safechennai, #GCTP மற்றும் #zeroisgood என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி உங்கள் ரீல்ஸை இன்ஸ்டாகிராமில் பதிவிடவும். கடைசியாக, ரீல்ஸ் போட்டிக்கான கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் பதிவை முடிக்கவும்.

போட்டியில் 3 விருதுப் பிரிவுகள் உள்ளன. சிறந்த செல்வாக்கு செலுத்துபவருக்கு ரூ.2 லட்சம் (அதிக பார்வைகளைக் கொண்ட வைரல் ஹிட் ரீல்ஸ்), சிறந்த படைப்பாளிக்கு ரூ.1 லட்சம் (ZAD ஸ்பிரிட்டை மிகச் சரியாகப் படம்பிடிக்கும் சிறந்த ரீல்ஸ்), சிறந்த வினையூக்கி (சமூகம்) ரூ.50 ஆயிரம் (அதிக லைக்குகளைப் பெற்ற இம்பாக்ட் ரீல்ஸ்) வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE