நாகப்பட்டினம்: உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் துர்நாற்றம் வீசி பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
நாகை மாவட்டம் நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தலமான இங்கு வரும் பக்தர்கள் மொட்டை போட்டு தர்கா குளத்தில் புனித நீராடி நாகூர் ஆண்டவரை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த நிலையில் நாகூர் தர்ஹா குளத்தில் இன்று காலை திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
குளத்தின் நிறம் பச்சையாக மாறி நான்கு புறத்திலும் குவியல் குவியலாக மீன்கள் மிதந்தன. இதன் காரணமாக, தர்ஹா குளம் மேற்கு, வடக்கு, தெற்கு, நூல்கடை தெரு, கலீபா சாஹிப் தெரு உள்ளிட்ட தெருக்கள் மட்டுமில்லாமல் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை துர்நாற்றம் வீசியது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் ஹுசைன் சாஹிப் தலைமையிலான தர்க நிர்வாகிகள் குளத்தில் உடனடியாக ஆய்வு செய்து 10 மீனவர்களை கொண்டு சிறிய படகுகளை வைத்து மீன்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். கோடை வெயிலின் தாக்கத்தால் மீன்கள் இறந்ததாகவும், விரைவில் குளம் தூய்மை செய்யப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் எனவும் தர்கா அறங்காவலர் தெரிவித்தார்.
» திருவள்ளூர்: தேவாலயத்துக்கு சொந்தமான கல்லறை தோட்டத்தில் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு
» நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை: ஏரிகளில் நீர் வரத்து அதிகரிப்பு