எதிர்வரும் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெண்களின் வங்கிக்கணக்கில் இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும் விடுமுறை தினங்கள், பண்டிகைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சில நாட்களுக்கு முன்னரே அந்த பணம் பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த மாதம் பொங்கல் பண்டிகை 15-ம் தேதி கொண்டாடப்படுவதால் அதற்கு முன்னதாகவே இன்று பெண்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்தவர்களில் மேலும் 2 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கும் சேர்த்து உரிமைத்தொகை அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 1.13 கோடி பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்ட நிலையில், இந்த மாதம் 1.15 கோடி பேருக்கு உரிமைத்தொகை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகையுடன் ரூபாய் ஆயிரம் ரொக்கமும் இன்று சேர்த்து வழங்கப்படுவதால் இந்த மாதம் அரசு தரப்பில் இருந்து 2000 ரூபாய் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிடைத்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியுடன் இந்த பொங்கலைக் கொண்டாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.