சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: சென்னை ஐகோர்ட் - யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம் என கருத்து தெரிவித்துள்ளனர்.
“சவுக்கு சங்கர் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அதுகுறித்த காரணங்களை உத்தரவில் தெரிவிக்கவில்லை. சவுக்கு சங்கர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமானவையாக தெரியவில்லை. எனவே அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு உள்நோக்கம் கொண்டது என்பதால் அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தற்போது நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் மீண்டும் மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா? என நீதிபதிகள், அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும், வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் தேவையில்லை என்றால் உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
வங்கதேச நிலவரம்: குழு அமைத்தது மத்திய அரசு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட தகவல் ஒன்றில், “வங்கதேசத்தில் நிலவும் சூழ்நிலையை அடுத்து, இந்திய - வங்கதேச எல்லையில் தற்போதைய நிலைமையை கண்காணிக்க மோடி அரசாங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளது. வங்கதேசத்தில் உள்ள இந்திய குடிமக்கள், இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அந்நாட்டில் உள்ள தங்களுக்கு இணையான அதிகாரிகளுடன் இந்தக் குழு தொடர்புகளை மேற்கொள்ளும். இந்தக் குழுவுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையின் கிழக்கு மண்டல ஏடிஜி தலைமை தாங்குவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
» புதுச்சேரி தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை: போலீஸார் விசாரணை
» அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்கக் கோரி கரும்புகளை ஏந்தியவாறு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மும்பை ஹிஜாப் வழக்கு: உச்ச நீதிமன்றம் கேள்வி: மும்பை கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத வந்த மாணவிக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “இஸ்லாமிய பெண்களை ஹிஜாப் அணிந்து வரக் கூடாது எனச் சொல்வதுபோல் மற்ற பெண்களை பொட்டு வைக்கக் கூடாது, திலகம் வைக்கக் கூடாது என்று உங்களால் சொல்ல முடியுமா, அவற்றை உங்களால் தடை செய்ய முடியுமா? பெயரிலேயே மதத்தை கண்டுபிடித்துவிடலாமே? அப்படியானால், அதற்கு மாற்றாக எண்களை வைத்து அழைப்பீர்களா?. மத பேதமின்றி அனைத்து மாணவர்களும் இணைந்து பயில வழிவகை செய்ய வேண்டும்” என்றது.
அதேநேரம், உடலை முழுமையாக மறைக்கும் வகையிலான பர்தா போன்ற ஆடைகளை மாணவிகள் அணிந்துவர விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து வழக்கின் விசாரணை நவம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.
மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்: அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: மக்களவைத் தேர்தலின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின்படி, கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
தமிழ்ப் புதல்வன் திட்டம் - முதல்வர் தொடங்கி வைத்தார்: அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை கோவை அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பயனாளி மாணவர்களுக்கு டெபிட் கார்டுகளையும் அவர் வழங்கினார்.
‘உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையிலும், அரசு, அரசு உதவி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியில் படித்து கலை அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம் சார்ந்த படிப்புகளில் சேரும் மாணவர்கள் இந்த திட்டம் மூலம் பயன்பெறுவார்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம் திறப்பு: கோவை உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு, பகுதிகளுக்கு விரைந்து செல்லும் வகையில் ரூ.481.95 கோடி மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை 3.8 கி.மீ நீளத்துக்கு கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பாஜக நிர்வாகி ஆஜர்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு பாஜக நிர்வாகிகளில் ஒருவரான பால் கனகராஜ், எழும்பூரில் உள்ள தனிப்படை போலீஸாரின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நேரில் விசாரணைக்கு ஆஜரானார்.
நீரஜ் சோப்ரா சாதனை! பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, தொடர்ச்சியாக அடுத்தடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் என்ற ஒலிம்பிக் சாதனைத் தடத்துடன் தங்கம் வென்றார். மிகக் கடினமான இந்தப் போட்டியில், இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா எறிந்த ஈட்டியின் தூரம் 89.45 மீட்டர். 88.54 மீட்டர் தூரம் வீசிய கிரனேடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் வெண்கலம் வென்றார்.
ஜகதீப் தன்கர் மீது ஜெயா பச்சன் காட்டம்: மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் சமாஜ்வாதி கட்சி எம்பி ஜெயா பச்சன் பேசும்போது, மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், “நீங்கள் திரைப்பட நடிகையாக இருக்கலாம்... ஆனால்...” என்று குறுக்கிட்டுப் பேசினார். இதனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோபடைந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய ஜெயா பச்சன், "மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் உறுப்பினர்களை மரியாதை குறைவாகப் பேசுகிறார். அவர் பயன்படுத்தும் வார்த்தைகளும் பேசும் விதமும் ஏற்க முடியாதவையாக இருக்கின்றன. நாங்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல. பள்ளி மாணவர்களும் அல்ல. எங்களில் பலர் மூத்த குடிமக்கள்.நாடாளுமன்றத்தில் ஜக்தீப் தன்கர் வரம்பு மீறி பேசுகிறார். அவர் பயன்படுத்தும் வார்த்தைகளை பொதுவெளியில் சொல்ல முடியாது. சில நேரங்களில் உங்களால் தொல்லையாக இருக்கிறது எனக் கூறுகிறார்.
உங்களுக்கு புத்தி குறைபாடு உள்ளது என்கிறார். நீங்கள் திரைப்பட பிரபலமாக இருக்கலாம்; அதுபற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை என என்னைப் பார்த்து ஜக்தீப் தன்கர் கூறினார். நான் 5-வது முறை நாடாளுமன்ற உறுப்பினர். நான் என்ன சொல்கிறேன் என்பது எனக்குத் தெரியும். தற்போதெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசப்படும் முறை முன்பு இல்லாதது. என்னைப் பற்றி ஆட்சேபனைக்கு உரிய விதத்தில் பேசியதற்காக ஜக்தீப் தன்கர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.இந்த செய்தியாளர் சந்திப்பின்போது காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் உடன் இருந்தனர்.