அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்கக் கோரி கரும்புகளை ஏந்தியவாறு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் கையில் கரும்புகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் செயல்பட்டு வந்த தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2021ல் கரும்பு பதிவு குறைந்ததாக அரசு தரப்பில் பொய்யான காரணங்களைக் கூறி உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆலையை திறக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சர்க்கரை ஆலையை திறக்கவும், ஆலையை செயல்படுத்த தமிழக அரசு ரூ.27 கோடி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் கரும்பு விவசாயிகள் கைகளில் கரும்புகளை ஏந்திவாறு முழக்கங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதற்கு அச்சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் என்.பழனிச்சாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.வேல்பாண்டி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வி.உமாமகேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.

கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கரு.கதிரேசன், துணைத் தலைவர் பி.எஸ்.ராஜாமணி ஆகியோர் விளக்கி பேசினர். கரும்பு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் நிறைவு செய்து பேசினார். போராட்டத்தின்போது அவ்வழியே சென்ற எம்பி சு.வெங்கடேசன் கலந்து கொண்டார்.

பின்னர், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க துணைத் தலைவர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்திலுள்ள 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மோசமான நிலையில் உள்ளது, தனியார் சர்க்கரை ஆலைகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு சர்க்கரை ஆலைகளில் உற்பத்தியை தமிழக அரசு நிறுத்தியுள்ளது. அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் விவசாயிகளை ஆலோசிக்காமல் சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியுள்ளனர். ஏற்கனவே ரூ. 1கோடி மதிப்புள்ள இயந்திரங்கள் திருடுபோனது தொடர்பாக வழக்குப்பதியப்பட்டுள்ளது. தற்போது சினிமா படப்பிடிப்பு நடத்துவதால் இயந்திரங்கள் திருடுபோக வாய்ப்புண்டு. ஆலையை பாதுகாக்க நீதிமன்றம் செல்வோம்" என்று பழனிச்சாமி கூறினார்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரன் பேசுகையில், "மா மதுரை விழா கொண்டாடும் வேளையில் மரபுமிக்க தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அலங்காநல்லூர் கூட்டுறவு தேசிய சர்க்கரை ஆலை திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தால் விவசாயிகள் கரும்பி பயிரிட தயாராக உள்ளனர், அரசின் சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டால் தனியார் ஆலைகள் மட்டுமே பயன் பெறுவர்" என்று ரவீந்திரன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE